PUBLISHED ON : மார் 05, 2018

பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியே தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆங்கில மொழியறிவு அவசியமானதுதான். அதேசமயம் தமிழ் வாசிப்பை பயன்படுத்தாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். 'ஆங்கிலத்தை கற்க தமிழைத் தவிர்ப்பது சரியா?' என்ற தலைப்பில், செங்கல்பட்டு, பழவேலி, ஸ்கேட் வோர்ல்டு பள்ளி (SCAD World School) மாணவர்கள் எழுத்தாளர் ப.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் உரையாடினார்கள்.
ப.கோபாலகிருஷ்ணன்
நாம வசிக்கிற இடத்துல இருந்து வேறு ஒரு பிரதேசத்துக்குப் போகும்போது, தொடர்புகொள்ள வேறு மொழி அவசியம் தெரிஞ்சிருக்கணும். இந்த நிலையில ஆங்கிலம் பொதுவான தொடர்பு மொழியா எல்லா இடத்திலயும் உதவுது.
நம்மோட ஆரம்பக்கல்வி, உயர்கல்வி எல்லாத்தையும் நாம ஆங்கிலத்துலதான் படிக்கறோம். அதனால ஆங்கிலத்துல நல்ல மொழியறிவு ஏற்படுத்திக்கறது அவசியமானது. ஆங்கில மொழி, இலக்கணத்தைக் கத்துக்க அதிக ஆர்வம் காட்டுறோம்.
ஆனா, நம்ம தாய்மொழியான தமிழை அதுக்காகப் புறக்கணிக்கக்கூடாது. தமிழுக்கு நீங்கல்லாம் எந்த அளவு முக்கியத்துவம் தர்றீங்கன்னு சொல்லுங்க.
செ.ஆனந்தி, 9ஆம் வகுப்பு
ஸ்கூல்ல ஆங்கிலத்துக்குத்தான் முக்கியத்துவம் தர்றாங்க. உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு ஆங்கிலம்தான் உதவியா இருக்கு. தமிழ் மொழிப்பாடமா மட்டுந்தான் வருது. அதனால நாங்க அதிகம் படிக்க முடியறதில்ல.
இரிட்டுமித்தா சரவணன், 9ஆம் வகுப்பு
நிறையப் பேர் தமிழ்ல பேசறதையே தாழ்வா நினைக்கறாங்க. தமிழ் பேசத் தெரிஞ்சா மட்டும் போதாது. அவசியம் எழுதப் படிக்க தெரிஞ்சுக்கணும். இதுக்கு பேரன்ட்சும் ஒத்துழைக்கணும். அவங்கதான் எங்களுக்கு தமிழோட முக்கியத்துவத்தை சொல்லி, எங்களை ஊக்கப்படுத்தணும்.
அ.சாய் யுவேதா, 9ஆம் வகுப்பு
தமிழ் இலக்கணம் கடினமா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆங்கிலத்துக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை தமிழுக்கு கொடுக்கறதில்ல. கல்வித் திட்டத்தை தமிழ்ல மாத்தி அமைச்சா நம்ம மொழியைக் நல்லா கத்துக்கலாம்.
ச.ப.புகல்பா, 9ஆம் வகுப்பு
தாய்மொழியான தமிழையே சரியா படிக்க, எழுதத் தெரியாத நிறையப் பேர் இருக்காங்க. பள்ளியில ஆங்கிலத்துக்கு முக்கிய இடம் கொடுத்தாலும், மாணவர்கள் தமிழை கத்துக்கறதுல ஆர்வம் காட்டணும். அதுக்கு தமிழ் வாசிப்பை அதிகரிக்கணும். தமிழ் பத்திரிகைகளை படிக்கணும்.
தே.சிவசங்கர், 8ஆம் வகுப்பு
ஆங்கில மோகம் நம்மகிட்ட அதிகமா இருக்கு. வீட்ல நான் இங்கிலிஷ்ல பேசினா பெருமையா நினைக்கறாங்க. ஆனா, சீனா, ஜப்பான் நாடுகள்ல அவங்க தாய்மொழியிலதான் எல்லாத்தையும் கத்துக்கறாங்க. ஆங்கிலத்தை கத்துக்கறதுக்காக தமிழ் தேவையில்லன்னு பேரன்ட்ஸும் நினைக்கறாங்க.
நா.ச.யுவன்சங்கர், 6ஆம் வகுப்பு
ஆங்கிலத்தைப் பயன்படுத்தறதை கௌரவமா நினைக்கற நிலைதான் இருக்கு. தமிழைக் கத்துக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் முக்கியத்துவம் கொடுத்தாதான் இந்த நிலைமை மாறும்.
ப.கோபாலகிருஷ்ணன்
படிப்புக்காக ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கறீங்க. தமிழை நீங்க புறக்கணிக்கலன்னும் தெரியுது. பள்ளியில முழுக்க ஆங்கிலத்தையே பயன்படுத்தினாலும் நீங்க சொந்த ஆர்வத்தோட, தமிழையும், அதோட இலக்கணத்தையும் கத்துக்கணும். பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிக்கறது மூலமா, உங்களோட தமிழ் மொழியறிவை வளர்த்துக்கலாம். நிறைய தமிழ் வார்த்தைகளைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும்.
தமிழ் வார்த்தைகளுக்கான அகராதி இருக்கு. அதை வாங்கிப் படிக்கலாம். மொழிக் கருத்துகளைப் பரிமாறிக்க மட்டுமல்ல. ஒரு சமூகத்தோட சிந்தனைகளை அது பிரதிபலிக்குது. அதனால, நாம ஆங்கிலத்தைக் கத்துக்கற அதேசமயம் தமிழுக்கும் நீங்க முக்கியத்துவம் கொடுத்து கத்துக்கணும்.
தாய்மொழிதான் ஒரு சமூகத்தோட ஆன்மாவா இருக்குது. ஆங்கிலத்துக்காக தமிழைத் தவிர்க்கவோ, புறக்கணிக்கவோ கூடாது.

