
மைக்கலாஞ்சலோ
6.3.1475 - 18.2.1564
இத்தாலி
முதியவர் சிரிப்பதைப் போன்ற ஒரு சிற்பத்தை பளிங்குக்கல்லில் செதுக்கி மெருகேற்றிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவரது குரு, 'நீ செதுக்கும் முதியவருக்கு எல்லாப் பற்களும் இருக்கிறதே?' என்று கேலியாகக் கேட்க, சற்றும் தயங்காமல் எந்தச் சேதமும் இன்றி, சிலையின் பற்களை மட்டும் உடைத்தெடுத்து சிற்பத்தை அழகாக்கினார். அவர்தான் உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கலாஞ்சலோ.
சிறுவனாக இருந்தபோது அவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தது. அதனால், பெற்றோரைப் பிரிந்து கல்வெட்டு செதுக்கும் ஒரு தொழிலாளியின் கண்காணிப்பில் வளர்ந்தார். அங்கே அவருக்கு விளையாடக் கிடைத்தது உளியும் சுத்தியலும்தான்! அப்போதிருந்தே ஓவியத்தின் மீதும், சிற்பத்தின் மீதும் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார்.
ஓவியக்கலையை முறையாகக் கற்றுக்கொள்ள அப்போது புகழ்பெற்றிருந்த ஒருவரிடம் மாணவராகச் சேர்ந்தார். அவரது திறமையைப் பார்த்து அந்த ஓவிய ஆசிரியரும் பொறாமைப்பட்டதாகக் கதைகள் உண்டு! கல்லோ, முள்ளோ எதுவாக இருந்தாலும் கூர்ந்து கவனித்து அவற்றைத் தத்ரூபமாக வரைவதில் மைக்கலாஞ்சலோ கில்லாடி. அதனால்தான் இவரை 'ஓவியத்துக்கான இலக்கணம் வகுத்தவர்' என்று குறிப்பிடுகிறார்கள்.
சிற்பக்கலை, ஓவியக்கலையில் மட்டுமல்லாமல், கட்டடக்கலை, கவிதைக்கலை போன்ற துறைகளிலும் சிறந்து விளங்கினார். ஓவியத்திலும், சிற்பத்திலும் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்ததில் மைக்கலாஞ்சலோவுக்கு முக்கியப் பங்கு உண்டு.
கலைப்பணியில் இருக்கும்போது, அவரது கவனத்தை யாராலும் திசை திருப்ப முடியாது. உணவு, உறக்கத்தை மறக்கும் அளவுக்கு வேலையின் மீது ஈடுபாடு காட்டி, அனைவரும் வியக்கும் வண்ணம் அவற்றைச் செய்து முடிப்பார். மைக்கலாஞ்சலோவின் உலகம் போற்றும் கலைப் படைப்புகளை ரசிக்கிற அதே நேரத்தில், அவரது விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமான படைப்புகள்: பியட்டா சிலை, டேவிட் சிலை, சிஸ்டின் சேப்பல் மேற்கூரை ஓவியம், கடைசித் தீர்ப்பு ஓவியம், ஆதாமின் பிறப்பு ஓவியம்

