PUBLISHED ON : அக் 28, 2019

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில்கேட்ஸ். இவர் மலேரியா நோயை உலக நாடுகளிலிருந்து ஒழிப்பதை, தன் “பில் -மெலிண்டா கேட்ஸ் பெளண்டேஷன்” அறக்கட்டளையின் முக்கிய வேலையாகச் செய்து வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள கேம்ஃப்ரிட்ஜ் கல்லூரியில் உரையாற்றினார். அதில், வருகிற 2040-ஆம் ஆண்டுக்குள், உலகம் முழுக்க மலேரியா நோய் கிட்டத்தட்ட வேரறுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கொசுவை ஒழிப்பது, அவ்வளவு சாமானியத் திட்டமா என்று மக்கள் நினைக்கலாம். ஆனால், இந்தப் பிரச்னையை அறிவியல்பூர்வமாக அணுகினால், மலேரியா நோய் பரப்பும் கொசுக்களை நிச்சயம் அழிக்கலாம் என்கிறார் பில்-கேட்ஸ்.
அதாவது, கொசுக்களின் குறிப்பிட்ட மரபணுக்களில் மாற்றங்களைச் செய்தால், அதன் மூலம் ஆபத்தான கொசுக்களின் பெருக்கம் தடுத்து நிறுத்தப்படும்; இதன் மூலம், மலேரியா நோய் இல்லாத உலகம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தன் வலைத்தளப்பக்கத்தில் இது பற்றிய ஆலோசனைகளைப் பகிர்ந்துள்ள பில்-கேட்ஸ், “உலகில் கிட்டத்தட்ட மூவாயிரம் கொசு இனங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கைந்து வகைக் கொசுக்கள்தான் மலேரியா நோயைப் பரப்புகின்றன. அதிலும் குறிப்பாக ஆண் கொசுக்கள் இரத்தத்தைக் குடிப்பதோடு சரி; ஆனால், பெண் கொசுக்கள்தான் மலேரியா தொற்றை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரப்பும் ஆபத்தான வேலையைச் செய்கின்றன. இதைத் தடுக்க, கொசுக்களின் மரபணுவில் மாற்றங்களைப் புகுத்தி, அதன் மூலம் அவற்றை நோய்களைப் பரவவிடாமல் தடுக்கச் செய்யும் யுக்தியை நாம் கையாள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.” என்கிறார் பில்கேட்ஸ்.
கொசுக்களின் மரபணுவில் மாற்றங்களைச் செய்ய உதவும் தொழில்நுட்ப முறைக்கு 'ஜீன் டிரைவ்' என்று பெயர். அதாவது, குறிப்பிட்ட சில கொசுக்களின் மரபணுக்களில் திருத்தங்களைச் செய்துவிடவேண்டும். அந்தக் கொசுக்கள் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களைப் பரப்பும் கொசுக்களுடன் இணைந்து புதிய கொசுக்களை உருவாக்கும்பட்சத்தில், அவற்றின் ஜீன்கள் திருத்தப்பட்ட ஜீன்களாக மட்டுமே இருக்கும்.
இதன் மூலம், கொசுக்களால் உண்டாகும் ஆபத்தான நோய்கள் முற்றிலும் நீக்கப்பட்டுவிடும் என்பதே பில்-கேட்ஸின் வாதம். மலேரியா ஒழிப்பில் புதிய அணுகுமுறையைப் பின்பற்ற விரும்பும் பில்கேடஸுக்கு இன்று பிறந்த நாள்.
- சு.கவிதா
