
வண்ணப் பூச்சு செய்த மண் பாண்டங்களைக் கடைகளில் பார்த்திருப்போம். மண் பாண்டமே ஒரு அழகு. அதன் மேல் வண்ணம் பூசி அலங்கரித்தால், அழகுக்கு அழகு சேர்த்த மாதிரிதான். இந்த வாரம், ஒரு சிறிய மண் சொப்பை எளிமையாக அலங்கரிப்போம்.
தேவையான பொருட்கள்: மண் சொப்பு, அக்ரிலிக் பெயின்ட் (Acrylic paint), பெயின்ட் பிரஷ், கிராஃப்ட் செய்யும் எம்சீல் (Craft Mseal). கண்ணாடிப் பொட்டுகள். (கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)
1. மண் சொப்பு மீது கருப்பு நிற அக்ரிலிக் பெயின்ட் பூசி, ஒரு மணி நேரம் காயவைக்கவும்.
2. எம்சீல் பாக்கெட்டில் இரண்டு கலவைகள் இருக்கும். இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். வெள்ளை நிறத்தில், பிசைந்த மாவு பதத்தில் வரும்.
3. அந்த மாவுக் கலவையை நன்கு உருட்டி மெல்லிய கயிறு மாதிரி திரிக்க வேண்டும். இந்தத் திரியைக் கொண்டு உங்களுக்குப் பிடித்த வடிவங்களை சொப்பின் மீது செய்து ஒட்டவும். ஆங்காங்கே வட்ட வடிவத்தில் பொட்டுகள் செய்து ஒட்டி, அதன் மீது கண்ணாடிப் பொட்டுகளையும் ஒட்டிவிடவும்.
- ஓவியா டீச்சர்