PUBLISHED ON : ஏப் 30, 2018

பிறப்பு: ஏப்ரல் 24, 1934, கடலூர்.
மறைவு: ஏப்ரல் 9, 2015, சென்னை.
தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அதன் பிறகு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டார். பத்திரிகை அலுவலக அச்சகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வரும் இலக்கியவாதிகளின் கலந்துரையாடல்களைக் கேட்டுக் கேட்டு, இலக்கியத்தின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. புலவர் க.சொக்கலிங்கம் என்பவரிடம் தமிழ், இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுக்கொண்டார்.
முறையாக இலக்கணங்களைக் கற்ற அவர், மாவு மில், கடைகள், கைவண்டி இழுத்தல் என பல வேலைகள் பார்த்தார். கிடைத்த ஓய்வுநேரத்தில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். குடிசைப் பகுதி மக்களின் வாழ்வை தமிழ் இலக்கியத்துக்குள் கொண்டு வந்தவர் இவரே. அவர் தான் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
'சரஸ்வதி', 'தாமரை', 'கிராம ஊழியன்', 'ஆனந்த விகடன்', 'அமுதசுரபி', 'தினமணி கதிர்' உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. அவரது படைப்புகள் அனைத்தும் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். அடித்தட்டு மக்களைப் பற்றியே எழுதினார். அவரது எழுத்து தனித்துவமானதாக இருந்தது.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அவர் எழுதுவதை நிறுத்தி விட்டார். அது பற்றிக் கேட்டால், 'நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க' என்பார்.
இவருடைய கதைகள் பல திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்', 'உன்னைப் போல் ஒருவன்' போன்றவை.
ஜெயகாந்தனின் இயற்பெயர் முருகேசன்.
'வாசகனுக்குப் பிடித்தவிதமாக என்னால் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்' என்ற ஜெயகாந்தன், சிறந்த சிறுகதை எழுத்தாளர். நாவலாசிரியர், கட்டுரையாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பேச்சாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.
பெற்ற விருதுகள்
1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது.
2002 இல் இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் 'ஞான பீடம்' விருது.
2009 இல் இந்திய அரசின் மிக உயரிய விருதான 'பத்ம பூஷன்'.
2011-ஆம் ஆண்டு ரஷிய விருது.
- த. சங்கர்
