PUBLISHED ON : ஏப் 11, 2016

ஓர் அழகான குதிரை. அரண்மனை முன் நிற்கிறது. நிறைய அலங்காரங்களுடன் அழகாக, கம்பீரமாக இருக்கிறது. அது ஒருவேளை பஞ்ச கல்யாணிக் குதிரையாகக்கூட இருக்கலாம்.குதிரைகளிலேயே அபூர்வமானதும் உயர் ரகம் எனக் கருதப்படுவதும் பஞ்ச கல்யாணிதான். (பலபேர் பஞ்ச கல்யாணி என்றால் கழுதை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.)
மன்னர் கை அசைத்ததும் குதிரை நடக்க ஆரம்பிக்கிறது. கூடவே சில வீரர்கள் பின் தொடர்கின்றனர். அசுவமேத யாகத்துக்கான குதிரை அது. இந்த வடமொழிச் சொல்லுக்கு 'குதிரை வேள்வி' எனப் பொருள் கொள்ளலாம்.
வலிமை வாய்ந்த மன்னர்களே இந்த யாகத்தை நடத்துவார்கள். இந்தக் குதிரை வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லும். சுதந்திரமாக மேயும். குதிரை, அந்த நாட்டுக்கு வந்ததை, உடன் சென்ற வீரர்கள், அந்த மன்னனுக்குத் தெரிவிப்பார்கள். அந்த அரசன் குதிரையைக் கட்டாமல் விட்டுவிட்டால் யாகம் நடத்திய மன்னனுக்குக் கட்டுப்பட்டதாகவும், கப்பம் கட்ட ஒப்புக் கொண்டதாகவும் அர்த்தம். மாறாக அதைக் கட்டிப் போட்டுவிட்டால் போருக்குத் தயார் என அறிவிப்பதாக அர்த்தம்.
அந்தக் குதிரை தடையின்றிச் செல்லும் நாடுகள் அனைத்தும் யாகம் நடத்திய மன்னனின் ராஜ்யமாகவே கருதப்படும்.
சுற்றித் திரிந்து பல நாடுகளை மன்னனின் கீழ் கொண்டுவந்த குதிரையின் கடைசி நிலை என்ன தெரியுமா? மீண்டும் நாட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அதை பலி கொடுப்பார்கள். அப்போதுதான் யாகம் முழுமை அடைந்ததாக அர்த்தமாம். எவ்வளவு நாடுகளை மன்னனுக்கு ஜெயித்துக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியாமலே உயிரை விட்டுவிடும்... பாவம்! கதை போலத் தோன்றும் இந்த வழக்கம், இந்தியாவில் ௧௧ஆம் நூற்றாண்டுவரை நிலவிவந்தது.
பஞ்ச கல்யாணிக் குதிரை அளவுக்கு, அசுவமேத யாகக் குதிரை அளவுக்கு லட்சணமான குதிரைகளை விடுங்கள். ஒரு சாதாரணக் குதிரையையாவது நீங்கள் கடைசியாகப் பார்த்தது எப்போது என்பதை மட்டும் நினைவுபடுத்திச் சொல்லுங்கள்!
