PUBLISHED ON : மே 07, 2018

தாவரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன என்ற உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக மனிதர்களுக்கு, தங்கள் அண்டை வீட்டாருடன் பிரச்னை ஏற்பட்டால், அந்தப் பகுதியிலிருந்து வேறொரு வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட முடியும். ஆனால், தாவரங்களால் அது முடியாது. பிரச்னையைப் புரிந்துகொண்டு அதைச் சரிசெய்ய, அருகிலுள்ள தாவரங்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. இதை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் உறுதிசெய்துள்ளனர்.
இதுதொடர்பாக, சுவீடன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு விஞ்ஞானி நின்கோவிக் கூறியதாவது: 'தாவரங்கள், தங்கள் வேர்ப்பகுதியை தகவல்தொடர்புக்காக பயன்படுத்துகின்றன. அவற்றுக்குத் தனித்துவமான தொடர்பு கொள்ளும் முறை உள்ளது.
அருகருகே நடப்பட்ட இரண்டு சோளச் செடிகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டோம். அவற்றின் இலைகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வது போல், பிரஷ்ஷால் தேய்த்துத் தொல்லை கொடுத்தோம். அதற்கு எதிர்வினையாக வேர்ப்பகுதி ஒரு திரவத்தைச் சுரந்தது. இதையடுத்து, அந்த இடத்தில் வேறு செடிகளை நட்டோம். புதிதாக நட்ட செடிகளில், வழக்கத்துக்கு மாறாக இலைகளே அதிகமாக வளர்ந்தன.
மறுபுறம், எந்தத் தொல்லையும் தராமல் இரண்டு செடிகளை வளர்த்துப் பார்த்தோம். அவற்றில், இலைகளைவிட வேர்ப்பகுதிகளே நன்றாக வளர்ந்தன. இதன்மூலம், தாவரங்கள் தம் அருகில் உள்ள மற்ற செடிகளுடன், வேர்ப்பகுதியின் ரசாயன சுரப்பு மூலம் சுற்றுப்புறம் குறித்த செய்திகளை பரிமாறிக்கொள்வது தெரியவந்துள்ளது. தனக்கு அருகில் உள்ளவை ஒரே இனத்தை சேர்ந்தவையா, வேறு செடிகளா, என்ன பிரச்னைகள் உள்ளன, வேர்ப்பகுதியை உறுதியாக்க வேண்டுமா அல்லது இலைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா என்றெல்லாம், தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. ' என்று தெரிவித்துள்ளார்.
