தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வடிவம் மாறும் தாவரங்கள்

வடிவம் மாறும் தாவரங்கள்

வடிவம் மாறும் தாவரங்கள்


PUBLISHED ON : நவ 20, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூங்காக்களில் தாவரங்களை சிற்பங்கள் போலச் வெட்டி உருவங்களை அமைத்திருப்பதை நாம் கண்டிருப்போம். தாவரப் புதர்களை வெட்டிச் சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தும் இந்த தாவரச் சிற்பக் கலை 'டோபியரி' (Topiary) எனப்படும். புதர் சிற்பக்கலை எனவும் கூறலாம். இப்படி வெட்டி வடிவமைக்கப்பட்டு வளரும் தாவரங்களும், 'டோபியரி' என்றே குறிப்பிடப்படுகின்றன. அடர்ந்து, நேராக வளரக்கூடிய பசுமைமாறாத தாவரங்களில் இந்த வடிவங்கள் செய்யப்படுகின்றன. குட்டையான, ஊசிபோன்ற மிகச்சிறிய இலைகளையுடைய பல்லாண்டுத் தாவரங்கள் இவை. இலைகளையும் கிளைகளையும் சீராக குறிப்பிட்ட இடைவெளிகளில் நறுக்குவதன் மூலம், இதுபோன்ற வடிவங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஏற்படுத்திய வடிவங்கள், பல ஆண்டுகளுக்கு அதே தோற்றத்தில் இருக்கவேண்டுமென்பதால், மிக மெதுவாக வளரும் தாவரங்களே இதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன

கம்பிகளும், கம்பி வலைகளும், கம்பிச் சட்டங்களும் குறிப்பிட்ட வடிவங்களைக்கொண்டு வருவதற்கு, சில சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தாவரங்கள் வளரும் முன்பே சட்டங்களை அவற்றைச் சுற்றிலும் பொருத்தி, பின்னர் அவற்றை அந்த சட்டங்களுக்கு ஏற்றாற்போல வளர்த்தும் விரும்பிய வடிவங்கள் கொண்டு வரப்படுகின்றன. தாவர வேலி (Hedge - ஹெட்ஜ்) எனப்படும் புதர்கள், மரங்கள் முதலான தாவரங்களைக் கொண்டு அமைக்கப்படும் உயிர்வேலியானது மிக எளிய 'டோபியரி' வடிவமாகும். ரோமானியர்களின் காலத்திலிருந்தே புதர்ச்செடிகளை விலங்கு, பறவை, மனிதர்கள், பந்துகள், எழுத்து வடிவங்களைப்போல வெட்டி சீராக வளர்க்கும் இந்தக் கலை இருந்து வந்திருக்கிறது. எகிப்தியர்களும் இவ்வடிவங்களைப் பல தோட்டங்களில் அமைத்திருந்தனர். 'வால்ட் டிஸ்னி' (Walt Disney) 1962ல், டிஸ்னி கேளிக்கைப் பூங்காவில், பிரபல கார்ட்டூன் வடிவங்களில் டோபியரியை ஏற்படுத்தினார். அதன் பிறகு உலகின் பல தாவரவியல் தோட்டங்களிலும், வீடுகளிலும் இந்தக் கலை பரவலாக்கப்பட்டது

அத்தி (Ficus), துஜா (Thuja), மருதாணி (Lawsonia), டுராண்டா, (Duranta) லன்டானா, (Lantana) , ஐவி (Ivy), தெட்சி (Ixora) போன்ற புதர்ச்செடி வகைகளே அதிகம் டோபியரிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஊசியிலைத் தாவரங்கள் (Conifers) டோபியரி மூலம் வடிவங்களைச் செய்து வளர்க்க மிக எளியதாகையால், உலகில் அதிகம் இதுவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதய வடிவம், குடை, பந்துகள், சதுரங்கள் போன்ற எளிய வடிவங்களிலிருந்து மிகச்சிக்கலான ஒட்டகச் சிவிங்கி, யானை, இயந்திரங்கள் போன்ற வடிவங்களும் டோபியரியில் உருவாக்கப்படுகின்றன. ஆர்வமிருந்தால் போதும், அதிக செலவின்றி மிக அழகிய இந்த தாவரச் சிற்பங்களை தோட்டங்களில் உருவாக்கி வளர்க்கலாம்.

- பேராசிரியை அ.லோகமாதேவி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us