PUBLISHED ON : மே 09, 2016

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் மே 12
இங்கிலாந்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், ஃபிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியருக்குப் பிறந்தார் ஃபளாரன்ஸ் நைட்டிங்கேல். தன் அப்பா உதவியுடன் கிரேக்கம், லத்தீன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய மொழிகளையும் வரலாறு, தத்துவம், கணிதம் ஆகிய துறைகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.
வாழ்க்கை பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என்று விரும்பிய நைட்டிங்கேல் செவிலியர் (Nurse) பணிக்குப் போக விரும்பினார். சிறுவயதில் இருந்தே செவிலியர் பணி பற்றிய புத்தகங்களைத்தான் விரும்பிப் படித்தார். தனது முழு நேரத்தையும் லண்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்காகச் செலவிட்டார். இறுதியில் ஜெர்மன் நாட்டில் உள்ள கெய்சர்வெர்த் (Kaiserwerth) மருத்துவமனையில் செவிலியர் பட்டப் படிப்பை முடித்தார். மிகச் சிறந்த மாணவியாகத் தேர்ச்சி பெற்று, விருப்பமான செவிலியர் பணியில் 1851ல் சேர்ந்தார். அப்போது இவருக்கு வயது 31. ரஷ்யா, பிரான்ஸ், ஐக்கிய மற்றும் துருக்கி ஒட்டோமான் படைகளுக்கு இடையே கிரிமியன் என்கிற இடத்தில் 1854 - 1856ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் ஏராளமான வீரர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 38 பேர் கொண்ட குழு ஒன்று நைட்டிங்கேல் தலைமையில் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது, இரவு நேரங்களில் கையில் மெழுகு விளக்கை ஏந்தியபடி நோயாளிகளின் இருப்பிடம் சென்று, நலம் விசாரித்து, மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தினார் நைட்டிங்கேல். இதைக் கண்ட ராணுவ வீரர்கள், 'தங்களைக் காக்க விண்ணுலகில் இருந்து தேவதை ஒன்று மண்ணுலகுக்குக் கையில் விளக்குடன் வந்துள்ளது' என்று புகழ்ந்து பாராட்டினார்கள்.
போருக்குப் பின் நாடு திரும்பியபோது, 'விக்டோரியா மகாராணிக்கு அடுத்து எல்லாருக்கும் அறிந்தவராக நைட்டிங்கேல் இருக்கிறார்' என்று பி.பி.சி. ஒலிபரப்பு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, 1883ஆம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்க விருதை விக்டோரியா மகாராணி வழங்கினார்.
நைட்டிங்கேல் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக, 1974ஆம் ஆண்டில் இருந்து 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. துன்பக் காலத்தில் நம்மைப் பேணிக் காக்கவும் போர் மற்றும் இயற்கை சீற்றத்தின்போது நம்மைக் காப்பாற்றவும் ஓடிவரும் செவிலியரை நன்றியோடு நினைவுகூர்வோம்.
1907ஆம் ஆண்டு பிரிட்டன் மன்னரின் 'ஆர்டர் ஆஃப் மெரிட்' என்னும் உயரிய விருதைப் பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான்!
