PUBLISHED ON : மே 02, 2016

தாகூர் பிறந்த தினம் மே 8
இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர். 'ஜனகண மன' தெரியும். தாகூர் எழுதிய 'அமர் சோனார் பங்களா' பாட்டு வங்க தேசத்தின் (Bangladesh) தேசிய கீதம்.
தன் கவிதைத் தொகுதியான 'கீதாஞ்சலி' நூலுக்கு 1913ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். இந்தியாவுக்குக் கிடைத்த முதல் நோபல் அதுதான்.
அதில் மிகவும் சந்தோஷப்பட்டார் நம்மூர்க் கவிஞர் பாரதியார். 'புகழ் பெறுவதாக இருந்தால் தாகூரைப் போல பெற வேண்டும். அவரை இந்தப் பூ மண்டலமே கொண்டாடுகிறது. தாகூர்தான் இந்தியாவுக்கு உலகத்தாரின் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தார்' என்று ஒரு கட்டுரையில் தாகூரைப் பாராட்டி பாரதி எழுதியது தாகூரின் சிறப்பைச் சொல்கிறது.
இளம் வயதில் பள்ளிப் படிப்பை வெறுத்தவர் தாகூர். பின்னாளில் சாந்தி நிகேதன் என்ற பள்ளியைத் தொடங்கினார். தான் பள்ளியில் வெறுத்த எந்த விஷயங்களும் இந்தப் பள்ளியில் இல்லாமல் பார்த்துக்கொண்டார். மாணவர்கள் மரத்தில் அமர்ந்து விளையாட, இவர் கீழே இருந்து பாடம் சொல்லிக்கொடுத்தார். ஆரம்பக் கல்வியை தாய்மொழியில்தான் சொல்லித்தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பள்ளி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 'விஸ்வபாரதி பல்லைக்கழக'த்தைத் தொடங்கினார். அதற்கு நிதி திரட்ட முப்பதுக்கும் அதிகமான நாடுகளுக்குப் பயணம் செய்தார். இத்தாலியின் பிரதமர் முசோலினியை 1926ல் சந்தித்தார். கல்வியில் சிறந்தவர்களை அழைத்து வந்து தன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாக அமர்த்தினார்.
கவிதை, படைப்பிலக்கியம், கல்வி என்று சாதனை செய்த தாகூருக்கு அறுபது வயது ஆயிற்று. ஓய்வு பெற வேண்டிய பருவத்தில், புதிதாக ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அந்த வயதில் அவர் வரைந்த ஓவியங்கள், பின்னாளில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் போயின!
