தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மாதுளத்து அரசி

மாதுளத்து அரசி

மாதுளத்து அரசி


PUBLISHED ON : ஆக 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிரேக்க அறுவடைக் கடவுள், டிமிடர் (Demeter). அவர் மகள் பெர்சிபோன் (Persephone). ஒரு நாள் பூப்பறிப்பதற்காக அவள் தோட்டத்திற்குப் போனாள். ஒரு பூ கைதவறிக் கீழே விழுந்தது. அதை எடுக்க அவள் குனிந்தபோது பூமி பிளந்து அவளைப் பாதாளத்துக்கு உள்ளே இழுத்துக்கொண்டது. எதிரே பாதாளக் கடவுள் ஹேடஸ் (Hades) நின்றிருந்தார். பெர்சிபோனுக்குப் பாதாள உலகம் பிடிக்கவில்லை. அந்த அரசனையும் பிடிக்கவில்லை.

நீண்ட நாட்கள் அவள் அழுது கொண்டே இருந்தாள். எப்போதேனும் மாதுளைப் பழங்களின் விதைகளை மட்டும் கொஞ்சம் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக்கொண்டாள். தேவதையைக் காணாமல் பெற்றோர் வருந்தினர். அறுவடைக் கடவுளே வருத்தத்தில் இருந்ததால், பூமியில் பஞ்சம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், பெர்சிபோன் பாதாளத்தில் இருப்பதை அவள் பெற்றோர் கண்டுபிடித்துக் கூட்டி வந்தனர்.

பாதாள உலக விதிப்படி அங்கு யார், எதைச் சாப்பிட்டாலும் அவர்கள் பாதாள உலகத்திற்கு உரிமையாவார்கள். இதனால் பெர்சிபோன், பாதாளக் கடவுளான ஹேடஸைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. வருடத்தின் ஆறு மாதங்கள் மட்டும் அவள் பாதாள உலகம் செல்ல நேர்ந்தது. தேவதையான பெர்சிபோன் பூமியில் வசிக்கும் காலம் வசந்த காலம் (spring).

கிரேக்க இலக்கியத்தில் இப்படி ஒரு கதை சொல்லப்படுகிறது.

இந்தக் கதையில் பெர்சிபோன் சாப்பிட்ட மாதுளையின் கதையும் சுவையானதுதான்.

மாதுளையின் தாயகம் ஈரான் மற்றும் வட இந்தியா. இதில் 700க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் இது பரவலாகப் பயிர்செய்யப்படுகிறது.

மாதுளம்பழம், 'சொர்க்கத்தின் தோட்டம்' என்று (gardens of paradise) குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு நகரத்திற்கு கிரானாடா (Granada) என்று பெயர். இந்தப் பெயர் பொமகிரனேட் (pomegranate) என்ற வார்த்தையில் இருந்து வந்தது.

லத்தீன் மொழியில் pomum என்றால் ஆப்பிள், granatum என்றால் விதைகள் என்று பொருள். பழமையான ஆங்கிலத்தில் மாதுளை 'apple of Grenada' என்று அழைக்கப்பட்டது.

நம் ஊரில் சமயச் சடங்குகளில் தேங்காய் உடைப்பது போல் கிரேக்க நாட்டில் மாதுளம்பழம் திருமணச் சடங்குகளில் உடைக்கப்படுகிறது. புத்தாண்டின்போதும் இதே போல்தான்!

அசர்பைஜான் (Azerbaijan) என்ற நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மாதுளைத் திருவிழா நடக்கிறது. அதில் ஆடல், பாடல், இசை போன்ற கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்கும்.

தமிழர்கள் பழங்காலத்தில் மாதுளம்பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடி, கறிவேப்பிலை கலந்து பசு நெய்யிலே வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். இதை

'சேதாநறுமோர் வெண்ணெயின் மாதுளத்து

உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து'

என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து அரசர் எட்டாவது ஹென்றியின் (Henry the VIII) மனைவி கேத்தரின் (Catherine of Aragon). அவர் தன் மேலங்கி, கழுத்து அணிகளில் அடையாள முத்திரையாகவும், சின்னமாகவும் மாதுளம்பழத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

மாதுளை - மாதுளங்கம், மாதளை, கழுமுள் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

கறுப்பு நிறத்தில் மாதுளை விளைந்தாலும் முத்துக்கள் சிவப்பாகவே இருக்கும்.

வைட்டமின் ஏ,சி மற்றும் இரும்பு சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது.

தாவரவியல் பெயர் புனிகா கிரானாடம் (Punica granatum). செடி, மரம் இரண்டின் பெயரிலும் அழைக்கப்படுகிறது.

பழமையான எகிப்தியக் கல்லறைகள் சிலவற்றில் உலர்ந்த மாதுளைப்பழங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மாதுளை உற்பத்தி, ஏற்றுமதியில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us