PUBLISHED ON : ஆக 22, 2016

உலகின் முதல் தொலைநோக்கியின் செயல்பாடு விளக்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 25
இன்றைக்கு 'ஹப்புள்' (Hubble) மாதிரியான அதிநவீன தொலைநோக்கி, (Telescope) பூமிக்கு மேலே, 600 கி.மீ. உயரத்தில் பூமியை வலம் வந்து, கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள், தொலைதூர கேலக்ஸிகள் என்று பலவிதமான வான்பொருட்களைப் படம் எடுத்து அனுப்புகிறது. அவற்றைக் கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
இப்படிப்பட்ட அதிநவீன தொலைநோக்கிகளை, இன்று நாம் உருவாக்குவதற்கு அடிப்படையாக இருந்த கண்டுபிடிப்பு, படத்தில் நீங்கள் பார்க்கும் இந்தக் கருவிதான். இதுதான் உலகில் உருவாக்கப்பட்ட முதல் தொலைநோக்கி.
இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி கலீலியோ கலிலி, இதை 1608ஆம் ஆண்டில் உருவாக்கினார். கலீலியோ வாழ்ந்த காலத்தில், கண்ணாடி உற்பத்தியாளர்கள், தூரத்தில் இருக்கும் பொருட்களைக் காண, உட்குவிந்த ஆடிகளைத் தயாரித்தார்கள். 'உளவுக் கண்ணாடிகள்' என்று அழைக்கப்பட்ட இந்த ஆடிகள், ராணுவ உளவு காரியங்களுக்குப் பயன்பட்டன.
கலீலியோ, இத்தகைய கண்ணாடிகளால் பெரிதும் கவரப்பட்டார். அவற்றைத் தொடர்சியாக ஆராய்ச்சி செய்து, விதவிதமான ஆடிகளைத் தயாரித்தார். ஒரு நீண்ட உருளையை உருவாக்கி, அதன் முன் பகுதியில் குவி ஆடி ஒன்றையும், பின் பகுதியில் குழி ஆடி ஒன்றையும் பொருத்தினார். ஆடிகளை மேலும் கீழும் நகர்த்திப் பார்த்தபோது, வியக்க வைக்கும் காட்சிகள் அவருக்குத் தென்பட்டன. ஆம்! கலீலியோ உருவாக்கிய ஆடிகள், நிலவையும், சூரியனையும், பிற கோள்களையும்கூடப் பெரிதுபடுத்திக் காட்டின!
கலீலியோ, தனது தொலைநோக்கியின் செயல்பாட்டை வெனீஸ் நகர முக்கியஸ்தர்களிடம், 1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று விளக்கிக் காட்டினார்.
வியாழனைச் சுற்றி 4 நிலவுகள் சுற்றுவதை, 1410ஆம் ஆண்டு ஜனவரி 2ம் வாரத்தில், கலீலியோ கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு வானவியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. 'அனைத்து வான்பொருட்களும் பூமியையே சுற்றுகின்றன' என்ற பண்டைய கருத்து தவறு என்பது, இதன் மூலம் தெரியவந்தது. 'பூமி உட்பட பிற கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றுகின்றன' என்பதை, அதே ஆண்டில் தனது தொலைநோக்கியின் உதவியுடன் கலீலியோ நிறுவினார்.
