PUBLISHED ON : ஜன 13, 2025

தமிழர் வாழ்வில் தனித்துவம் மிக்க பண்டிகையாக விளங்குவது பொங்கல் விழா. ஆடி மாதம் விதை விதைத்து, தை மாதம் அறுவடை செய்து, புது நெல்லை அரிசியாக்கி, புதுப் பானையில், புது அடுப்பில், பாலுடன் சேர்த்து, சோறு பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' எனக் கூவி வாழ்த்துகிறோம். நெல் விளைச்சலுக்குக் காரணமான சூரியனை வணங்கி, இனிப்பிட்ட பொங்கலையும் கரும்பையும் தின்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
'பொங்கல் பண்டிகை சங்க காலத்தில் இருந்ததா?' என்று கேட்டால் நேரடியாக அதற்கான ஆதாரம் இல்லை. ஆனால், மற்ற எல்லாத் தொழில்களையும்விட உழவே சிறந்தது என்ற கருத்து தமிழர்களிடம் இருந்தது.
'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை'
என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். உழவுத் தொழிலை இவ்வளவு உயர்வாக மதிக்கும் தமிழ்நாட்டில், அதைக் கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள்.
சங்க காலத்தில் கூறும் தை நீராடலுக்கும் தைப் பொங்கலுக்கும் தொடர்பு இல்லை. எந்த விழா என்றாலும் பொங்கல் செய்வது தமிழர் மரபு. பொங்கல் என்பது இனிப்பின் அடையாளம். அதே போலத்தான் கரும்பும்.
தமிழர் மரபில் விழா என்பது, இரவும் பகலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. விடிய விடியப் பறை அடித்து விழா கொண்டாடியிருக்கின்றனர். போகிப் பண்டிகை இந்திரனுக்கான பண்டிகை என்று சொல்வதும் உண்டு. சங்க காலத்தில் இந்திர விழா சித்திரையில் நடந்திருக்கிறது.
இன்று மார்கழி மாதத்தின் இறுதி நாளில் கொண்டாடுகிறோம். வீடு வாசலைச் சுத்தமாக்கி, சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்து, போகி அன்று பழைய பொருட்களை எரித்துவிடுகிறோம். பொங்கல் அன்று வீட்டில் காப்பு கட்டும்போது, பூளைப் பூவையும் வைப்பது வழக்கம்.
கண்ணகி மதுரையை எரித்தபோது நான்கு வகை பூதங்கள் மதுரையை விட்டு வெளியேறின. அப்போது அந்தப் பூதங்கள் பூளைப் பூவை அணிந்திருந்தன என்கிறது சிலப்பதிகாரம். எனவே, கெட்டது போகும் அடையாளமாகத்தான் போகிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர். நல்லதை இனிப்பாக வரவேற்க பொங்கல் வைத்துக் கொண்டாடியுள்ளனர்.
- கை. சங்கர்