சரித்திரம் பழகு: புதுச்சேரி பாண்டிச்சேரியானது எப்படி?
சரித்திரம் பழகு: புதுச்சேரி பாண்டிச்சேரியானது எப்படி?
PUBLISHED ON : ஜன 20, 2025
ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்தது போன்றே, பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி இருந்தது. புதுச்சேரி என்றால், புதிதாக உருவாக்கப்பட்ட ஊர் என்று பொருள். கையெழுத்து ஆவணம் எழுதிய பிரெஞ்சு அதிகாரி, சென் மலோ(st.malo) என்பவரின் ஊழியர்தான், புதுச்சேரி (poudicheri) என்பதை, பொந்திச்சேரி (Pondicherry) என்று தவறுதலாக மாற்றி எழுதி விட்டார். அதாவது 'u' என்ற எழுத்து வரவேண்டிய இடத்தில், 'n' என்று தலைகீழாக எழுதி விட்டார். இதனால், புதுச்சேரி பொந்திச்சேரி ஆனது. பொ.யு. 1617இல் இப்படி மாற்றி எழுதப்பட்டது.
17ஆம் நூற்றாண்டு அதாவது 1600களில் போர்த்துக்கீசியர் நில வரைபடங்களில் புதுச்செய்ரா (pudecheira) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டச்சுக்காரர்கள் பொலசெரா (poelesera) என்று அழைத்தனர். ஆங்கிலேயர்கள் பொந்திச்சேரியை, பாண்டிச்சேரியாக்கி விட்டனர்.
புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளை போன்றோரின் நாட்குறிப்புகளில் புதுச்சேரி, புதுவை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 2016இல் புதுச்சேரியா, பாண்டிச்சேரியா என்ற பிரச்னை எழுந்தது. மாநிலத்துக்கானப் பெயர் புதுச்சேரி என்றும், நகரத்துக்கான பெயர் பாண்டிச்சேரி என்றும் தீர்வு காணப்பட்டது.