தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பொங்குக பொங்கல் எங்கெங்கும்

பொங்குக பொங்கல் எங்கெங்கும்

பொங்குக பொங்கல் எங்கெங்கும்


PUBLISHED ON : ஜன 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலத்தைக் கொத்திப் பண்படுத்தி

நெடும்பரப்பாகச் சீர்படுத்தி

வளத்தைப் பெருக்க நீர்பாய்ச்சி

வரப்பை எடுத்துக் கரைகட்டி

வண்டி மாட்டை ஏர்பூட்டி

வாகாய் மண்ணில் உழவோட்டி

உண்டி கொடுக்கும் உயிர்கொடுக்கும்

உழவர் சிறப்பை ஊர்போற்றும் !

சோற்றுத் தட்டில் விழுகின்ற

சோற்றுப் பருக்கை ஒவ்வொன்றும்

சேற்றில் இறங்கும் உழவர்களின்

சீரிய உழைப்பால் விளைந்தவையாம்.

நாற்றைப் பிடுங்கிப் பயிரிட்டு

நாட்கணக்காக நீர்பாய்ச்சி

வேற்று நினைவே இல்லாமல்

வியர்வை பெருகக் களைபறித்து

கதிர்கள் முற்றக் காத்திருந்து

கதிரை அறுத்துத் தாளடித்து

உதிரும் மணியை உலகோர்க்கு

ஒன்றாய்த் திரட்டித் தருகின்றார்.

நாட்டு வளத்தை அறிவதற்கு

நன்றாய் ஒன்றைக் காட்டென்றால்

நாற்று வளத்தைக் காட்டுவதே

நல்லறி வாளர் செயலாகும்.

விளைச்சல் முடிந்த நன்னாளில்

விளைய வைத்த சூரியனை

அழைத்துப் பொங்கல் படையலிட்டு

அன்போடுண்ணும் திருநாளாம்.

கூட்டு உழைப்பில் பங்கேற்று

கூடி உழைத்த நன்றிக்கு

மாட்டுப் பொங்கல் கொண்டாடி

மகிழும் நன்னாள் மறுநாளாம்.

உலக முதலோன் கதிரவனை

உழைப்பில் திளைத்த உழவர்களை

விளைச்சல் தந்த மண்மகளை

விளைந்து கிடைத்த நெல்மணியை

உழுது களைத்த மாடுகளை

ஒன்றாய்ப் போற்றிக் கொண்டாடும்

பழுதில்லாத திருநாளில்

பொங்குக பொங்கல் எங்கெங்கும்.

-மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us