தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கையால் எழுது; கவனம் குவியப் பழகு!

கையால் எழுது; கவனம் குவியப் பழகு!

கையால் எழுது; கவனம் குவியப் பழகு!


PUBLISHED ON : டிச 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாராந்திர வகுப்புத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் வந்தன. எல்லாமே பதினைந்து மதிப்பெண்களுக்கான தேர்வுகள்தான். 7 முதல் 10க்கு மேல் மார்க் வாங்க முடியவில்லை. நிறைய தவறுகள். பல இடங்களில் ஆசிரியர்கள் சிவப்பு மையால் சுழித்திருந்தார்கள். முழு மதிப்பெண் போடாமல், பல பதில்களுக்குக் குறைவாகப் போட்டு இருந்தார்கள்.

இதற்கெல்லாம் அம்மாவும் அப்பாவும் பல கேள்விகளைக் கேட்கப் போகிறார்கள். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எங்கே பிழை? என்ன திருத்திக்கொள்ள வேண்டும்? குழப்பமாக இருந்தது.

மாலையில், உமா மிஸ்ஸிடம் என் விடைத்தாள்களைக் காண்பித்தேன். ஒவ்வொரு பாட விடைத்தாள்களையும் பொறுமையாகப் பார்த்தார். என் ஆதங்கத்தை முதலிலேயே தெரிவித்துவிட்டேன். நான் என்ன செய்தால், முழு மதிப்பெண் கிடைக்கும்?

“நீ நிறைய டெக்ஸ்ட் பண்றீயோ?”

சட்டென புரியவில்லை. “டெக்ஸ்ட்?”

“நிறைய மொபைல்போன் பயன்படுத்துறீயா?”

நான் ஒரு கணம் நிதானித்தேன். ஆமாம், சமீபகாலமாக, அம்மாவின் அலைபேசி என்னிடமே இருக்கிறது. நண்பர்களுக்கு இந்த எண்ணையே கொடுத்துள்ளேன். நண்பர்கள் சேர்ந்து ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கிவிட்டார்கள். அதிலும் இந்த எண் சேர்க்கப்பட்டுள்ளது.

லேசாக அசடு வழிவது போல், 'ஆமாம்' என்றேன்.

“பேப்பர்லதான் அது தெரியுதே! colourக்கு colorன்னு எழுதியிருக்கே. பல வார்த்தைகள் ஸ்பெல்லிங் தப்பு. நிறைய இடங்கள்ல வார்த்தைச் சுருக்கங்கள் வேற. இதெல்லாம், மொபைல் போன் பாதிப்புதானே!”

என் கையில் இருந்த சில விடைத்தாள்களைத் திருப்பிப் பார்த்தேன். சிவப்பு சுழி போடப்பட்டதில் பலவும் இதேபோன்ற பிழைகள்தான். ஒரு இடத்தில் youவுக்கு U என்றுகூட எழுதியிருந்தேன்.

“இது இன்னிக்கு பல மாணவர்களோட பிரச்னை கதிர். இதைப் பத்தி நிறைய ஆய்வு செஞ்சிருக்காங்க. உங்களுக்குத் தெரியாமலேயே இதெல்லாம் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கு.”

“என்ன பாதிப்புகள் மிஸ்?”

“முதல்ல, நீங்க இரண்டு மொழிகளைப் படிக்கறா மாதிரி ஆகிப் போச்சு. அலைபேசி மொழி ஒண்ணு. பாடத்துல படிக்கிற மொழி ஒண்ணு. முன்னே அப்படி இல்லை. நீங்கள் பாடங்கள்ல என்ன மொழியைப் படிச்சீங்களோ, அதைத்தான் ஞாபகம் வெச்சுக்கிட்டீங்க, தேர்வுகள் எழுதினீங்க. இன்னிக்கு கூடுதலா, இப்படிப்பட்ட குறுஞ்செய்தி மொழி ஒண்ணு சேர்ந்துக்கிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கு.

பல மாணவர்கள்; வாரத்துக்கு 3,400 மெசேஜ்கள் அனுப்பறதா ஒரு ஆய்வு சொல்லுது. அதாவது சின்னச் சின்னதா வரிகள், ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தைகள்... எமோஜிக்கள் போட்டு எழுதறதுன்னு பழக்கம் வந்துடுச்சு. எல்லா போன்லேயும் இப்போ தானாகவே திருத்திக்கொள்ற வசதி இருக்கு. நீங்க, தப்பா ஸ்பெல்லிங் எழுதினாகூட, தானாகவே திருத்திடும். அப்படின்னா, உங்களுக்குப் பல சொற்களோடு உண்மையான ஸ்பெல்லிங்கே தெரியாது.

இன்னொரு பிரச்னை, குறுஞ்செய்திகளுக்கு இலக்கணம் வேண்டாம். ஆனால், நோட்டுப் புத்தகத்துலேயும் விடைத்தாள்களிலும் இலக்கணம் முக்கியம். எது இலக்கணப்படி சரியான வாக்கியங்கற குழப்பம் ஏற்பட்டுப்போச்சு. நீங்க, உடனே, சுலபமா இருக்கிற குறுஞ்செய்தி மொழியையே சரியான பயன்பாடுன்னு நினைச்சுக்கறீங்க.

இதெல்லாத்தையும்விட பெரிய பிரச்னை இருக்கு. நிதானமாக எழுதறதுக்கான வலிமை குறைஞ்சுபோச்சு. எல்லாத்தையும் சட்டுசட்டுன்னு முடிச்சுடணும்னு நினைக்கறீங்க. பாடத்துல அப்படி சாத்தியமே இல்லையே. ஒரு கேள்விக்கான விடை எழுதணும்னா, விரிவா எழுதணும். அதுல சொல்லப்பட வேண்டிய அத்தனை பாயிண்டுகளும் வரணும். விளக்கம் முக்கியம். அப்பத்தான், நீங்கள் அந்தக் குறிப்பிட்ட கேள்வியைப் புரிஞ்சுக்கிட்டு பதில் எழுதி இருக்கீங்களான்னு ஆசிரியர் புரிஞ்சுக்க முடியும்.

ஆனால், உங்களுக்கு அந்த நிதானமோ, வலிமையோ இல்லை. பத்து நிமிஷம் பேப்பர்ல எழுதறதுக்குள்ளேயே கை வலிக்கும். மனசு குவியாது. அடுத்தடுத்த பாயிண்டுகள் ஞாபகம் வராது. கவனம் சிதறிப் போகும். உடனே ஒரு பிரேக் எடுத்துக்கத் தோணும். ரொம்ப போர் அடிக்கும். எழுதிக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. பத்தாவது, பிளஸ் டூ தேர்வெல்லாம் 3 மணிநேரம் எழுதணும். அப்படின்னா, அதுக்கு எவ்வளவு வலிமை, பொறுமை, உடல் வணங்கி உட்கார்ந்து எழுதுவதற்கான முனைப்பு எல்லாம் வேணும்?

இன்னொரு பெரிய பிரச்னை, உங்க கையும் கண்ணும் கெட்டுப் போயிடும். எழுதும்போது, நீங்க அந்த வெள்ளைத்தாளை ரசிப்பீங்க. அனுபவிச்சு எழுதுவீங்க. அதுக்குள்ள தான் உங்க உலகம் இருக்கும். அதுக்குள்ள எல்லாத்தையும் கொட்டணும்னு விரும்புவீங்க. இப்போ, மொபைல் வந்தவுடனே, உங்கள் திரை அளவு சுருங்கிப் போச்சு. இதுலேருந்து உங்க கவனத்தை விரிந்த வெள்ளைத்தாளுக்கு எப்படி கொண்டு போவீங்க?”

உமா மிஸ் கேட்க கேள்விகள் எல்லாம் என்னை பயமுறுத்தின. பாடம் சார்ந்த எழுத்துக்கும், பொழுதுபோக்குக்கான எழுத்துக்கும் இவ்வளவு இடைவெளி ஏற்படும் என்று யோசித்ததில்லை. பாதிப்பு ஏற்படும் என்றும் நினைத்ததில்லை.

“ஒரு காலத்துல, கையெழுத்து சரியா இல்லைன்னு நாங்கெல்லாம் ரொம்ப கவலைப்படுவோம். ஒரே உயரத்துல, வடிவத்துல, சீரா எழுதணும். பார்க்கும்போதே கண்ணுல ஒத்திக்கறா மாதிரி இருக்கணும்னு நினைப்போம். இப்போ நீங்க எழுதறதப் பார்த்தா, முதல்ல உங்களுக்கு எழுதவே ஆர்வம் வருமான்னு டவுட் வருது…”

“ஏன் மிஸ் இப்படி பயமுறுத்தறீங்க? நல்லதா ஒண்ணுகூட இல்லையா?”

“ஓ! ஒண்ணே ஒண்ணு இருக்கு. முன்பெல்லாம் எல்லோரும் எழுத தயங்குவீங்க. இப்போ அந்தத் தயக்கம் போயிடுச்சு. ஆனா, என்ன எழுதறீங்க, எப்படி எழுதறீங்கங்கற கவலை வந்துடுச்சு.”

“எப்படி மிஸ் இதைத் திருத்திக்கறது?”

“மொபைல் போனைத் தூக்கி கடாசுங்கன்னு சொன்னா, என்னைப் பிற்போக்குவாதியாக, காலத்துக்கு ஒவ்வாதவரா நினைச்சுடுவீங்க. முடிஞ்சவரைக்கும் குறைச்சுக்கோங்க. இன்னொரு வழி, தினமும் எழுதறது. பொறுமையாக, ஒவ்வொரு கேள்வி பதிலையும் கட்டுரையையும் எழுதிப் பாருங்க. பத்து, பத்து நிமிஷமா கூட்டிக்கிட்டே வாங்க.

உங்க ஆண்டுத் தேர்வை 2.5 மணிநேரம் உட்கார்ந்து எழுதணும். அதுவும் வேகமா எழுதணும். அதுக்கான பயிற்சியை இப்போதிலேருந்தே ஆரம்பிங்க. கையால எழுதறதுங்கறது ரசனைக்குரிய விஷயம். அதைத் தொலைச்சுடாதீங்க.”

உமா மிஸ் சொன்னதில் உள்ள உண்மை என்னை யோசிக்க வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us