PUBLISHED ON : டிச 10, 2018

சமூகத்தில் பல ஏமாற்றத்தைச் சந்தித்த மக்களிடையே மாற்றத்தை நோக்கி புதிய பாதை அமைத்துத் தந்துள்ளார் ஹரிஹரன். சென்னை, திருவொற்றியூர் பகுதியில் தனது விவேகானந்தா சேவை மையம் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக, பல மாணவர்களுக்கு இலவசக் கல்விச் சேவை அளித்து வரும் ஹரிஹரனைச் சந்தித்தோம்:
“ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்துகொள்ள சமூகத்தில் நிறைய வழிகள் உள்ளன. ஆனால், நல்ல மனிதனாக உருவாக்குவது கல்வி ஒன்று மட்டும் தான்.
இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது பெரும் வியாபாரமாக மாறிவிட்டது. அதில் மதிப்பெண் என்னும் இலக்கை நோக்கி ஓடும் குதிரைகளாக மாணவர்கள் உள்ளனர். பள்ளி, கல்லூரி படிப்பிற்குச் செலுத்தும் கட்டணத்தை விட சிறப்பு வகுப்புகளான Tution, Neet போன்றவற்றிற்குச் செலுத்தும் கட்டணம் பல ஆயிரக்கணக்கில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்குப் பாடங்களில் போதிய புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றே, இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். மாலை 5.30க்கு மேல், கிட்டத்தட்ட 100 மாணவர்கள் வரை இங்கே வருகிறார்கள். ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள் வரை இங்கே வருகிறார்கள். என்னிடம் படித்து இன்று நல்ல நிலையில் உள்ள பல மாணவர்கள் என்னோடு இங்கே வகுப்புகள் எடுக்கிறார்கள்.
மாணவர்களுடைய பாடத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்த்துவைத்து, நல்ல மதிப்பெண் வாங்குவதற்கான பயிற்சிகளை தருகிறேன். பாடங்கள் தேர்வில் வெற்றியைத் தரும். வாழ்வில் வெற்றிபெற பல திறன்கள் வேண்டும். வாசிப்பு, விளையாட்டு என்று அத்தனை திறன்களுக்கும் நாங்கள் இடமளிக்கிறோம்; ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒரு தனித்துவம் உள்ளது. அதை வெளிக்கொண்டு வருவதே எங்களின் நோக்கம்.
மாதம் இருமுறை ஒரு துறை சார்ந்த வல்லுநர் இங்கு வந்து சிறப்பு வகுப்பு அளிப்பார்கள். திருக்குறளை வெறும் பாடமாக நாங்கள் சொல்லிக்கொடுப்பதில்லை, அதை நாடகமாக நடத்திவருகிறோம்.
நான் சின்ன அகல்விளக்கு மாதிரி செயல்பட்டு வருகிறேன். இதன் பலன் உரியவர்களைச் சேர்ந்தால் போதும்.”
- நீல்கமல்
