தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பீடாக் கறை நீக்க புதிய உத்தி!

பீடாக் கறை நீக்க புதிய உத்தி!

பீடாக் கறை நீக்க புதிய உத்தி!


PUBLISHED ON : டிச 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியா முழுவதும், பொது இடங்களின் அழகைக் கெடுக்கக்கூடிய விஷயங்களில் ஒன்று பீடாக் கறை. குறிப்பாக வடமாநிலங்கள்... பேருந்து நிலையங்கள், ரயில் மற்றும் ரயில் நிலையங்கள், வரலாற்று நினைவுச்சின்னம், அரசு கட்டடங்கள், சாலையோர சுவர்கள், சுரங்கப்பாதை என்று, பீடாக்கறைக்கு எவையும் தப்புவதில்லை.

அதேசமயம், இந்தக் கறையைச் சுத்தம் செய்வதும் சாதாரண விஷயமல்ல. விளக்கமாகச் சொல்வதென்றால், பீடாக் கறையை அகற்றுவதற்காக, இரயில்வே துறையால், தினமும் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், ஆண்டுக்குக் கோடிக்கணக்கான ரூபாயும் செலவழிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னைக்குப் புதிய தீர்வைக் கண்டறிந்துள்ளனர் மும்பை ராம்நரேன் ருயா கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவிகள்.

மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிரிகளின் (GMO) உதவியுடன் கறைகளை அகற்ற முடியும் என்பதை மாணவிகள் நிரூபித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த 'சர்வதேச மரபணு மாற்ற பொறியியல் போட்டி 2018'இல், பரிசை வென்றுள்ளது. 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்கள் கண்டுபிடிப்பு பற்றி மாணவிகளில் ஒருவரான நிஷ்தா பகிர்ந்துகொண்டார்:

“நாங்கள் பான் தயாரிப்பாளர்களைச் சந்தித்து, காவி வண்ணத்துக்காகச் சேர்க்கப்படும் மூலப்பொருட்கள் குறித்து தெரிந்துகொண்டோம். பின்னர், சலவையாளர்களிடம் பேசி, கறையைப் போக்குவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் அதிலுள்ள சிக்கல்களைக் கேட்டறிந்தோம். இதன் அடிப்படையில், பிரச்னைக்கு உரிய தீர்வைத் தேடினோம். நுண்ணுயிரிகள் வெளியிடும் என்சைம்களைப் பயன்படுத்தி, கறைகளை நீக்கும் ஆய்வில் ஈடுபட்டு, தீர்வைக் கண்டுபிடித்தோம். இந்த வழிமுறை இயற்கையானது; கறைகளைச் சுத்தமாக அகற்றிவிடும். இதையடுத்து, ஜெல்லுடன் என்சைம்களை கலந்து, கறைபடிந்த பகுதிகளில் அதைத் தடவ வேண்டும். சிறிதுநேரத்தில், குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி கறைகளை எளிதாக அகற்றிவிடலாம்.

மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியாவைத்தான் இதற்காகப் பயன்படுத்துகிறோம். எனவே, அவற்றை நேரடியாக சுற்றுச்சூழலில் விட முடியாது. அவற்றிலிருந்து என்சைம்களை மட்டும் எடுத்து பயன்படுத்துகிறோம். இன்னும் 6 மாதங்களில் இதை வர்த்தகரீதியாக தயாரிக்க உள்ளோம்.

எங்கள் கண்டுபிடிப்பு, துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைச்சுமையையும், ஆசிட் மற்றும் தண்ணீர் தேவையையும் கணிசமாக குறைக்கும். அமெரிக்காவின் பாஸ்டனில், எம்.ஐ.டி.யால் (M.I.T) நடத்தப்பட்ட, 'மரபணு மாற்ற பொறியியல் போட்டி'யில் இந்தக் கண்டுபிடிப்பை சமர்ப்பித்தோம். போட்டிக்குள் நுழைந்த, உலகின் ஒரே இளநிலைக் கல்லூரி நாங்கள்தான். சுற்றுச்சூழலுக்கான சிறந்த திட்டப் பிரிவின் கீழ் எங்கள் கண்டுபிடிப்பு பரிசை வென்றுள்ளது. மேலும் சமூக நோக்கிலான கண்டுபிடிப்புக்காகவும் நாங்கள் சிறப்பு பரிசைப் பெற்றுள்ளோம்.

பீடாக் கறைகளை நீக்கும் அதேசமயம், பீடா பயன்பாட்டை தடுப்பதிலும் நாங்கள் களம் இறங்கியுள்ளோம். பொதுஇடங்களின் அழகு கெடுவது மட்டுமல்ல, நோய் தொற்றுகளும் பெருளமவில் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க வேண்டியது அவசியம்.” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us