தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வார்த்தைகளற்ற பெருமிதம்!

வார்த்தைகளற்ற பெருமிதம்!

வார்த்தைகளற்ற பெருமிதம்!


PUBLISHED ON : ஆக 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசபக்தி

ஜானகி தேவர் (எ) ஜானகி ஆதி நாகப்பன்

25.2.1925 - 9.5.2014

சுதந்திர தினம், குடியரசு தினம் என்று எது வந்தாலும், உடனே எங்கள் பள்ளியே பரபரப்பாகிவிடும். உடனே, பாட்டு, நாடகம், கவிதை வாசிப்பது என்று நிறைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள். ஆசிரியர்கள் பாடாய்ப் படுத்துவார்கள். இம்முறை நானும் மாட்டிக்கொண்டேன். வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில், நான் யாரேனும் ஒரு விடுதலைப் போராட்ட வீரரைப் பற்றிப் பேசவேண்டும்.

உடனே தேட ஆரம்பித்தேன். அப்பாவையும் அம்மாவையும் பிடுங்க ஆரம்பித்தேன். அவர்கள் சொல்லும் தலைவர்கள் எல்லோரும் ஏற்கெனவே தெரிந்தவர்கள், ஒன்றும் புதுமை இல்லை. ஒரு கட்டத்தில் எரிச்சலே வந்துவிட்டது. எதற்கு இப்படிப் போட்டு வாட்டுகிறார்கள்? பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளை இப்படியெல்லாம் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமா? எங்களுக்கே தெரியாதா என்ன என்ற கேள்வியெல்லாம் எழுந்துவிட்டது.

என் எரிச்சலும் கேள்விகளும் உமா மிஸ்ஸிடம் போய்ச் சேர்ந்துவிட்டது. ஓவியா தான் புண்ணியம் கட்டிக்கொண்டாள்.

“என்ன கதிர், ரொம்ப கடுப்பாயிருக்க போல இருக்கே?” ஓவியா பக்கத்தில் நின்று நமட்டுச் சிரிப்புச் சிரித்ததால், எனக்கு சட்டென்று கேள்விக்கான காரணம் விளங்கிவிட்டது.

“ஆமாம் மிஸ், திருப்பித் திருப்பி, ஒருத்தரைப் பத்தியே எத்தனை முறை பேசறது?”

“உன் பிரச்னை, விடுதலைப் போர்ல பங்கெடுத்த பல வீரர்களைப் பத்தி விவரம் தெரியமாட்டேங்குதுங்கறதா? இல்ல, இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தைப் பத்தியா?”

நான் உண்மையில் குழம்பிப்போனேன். விவரம் கிடைக்கவில்லை என்பதுதான் என் பிரச்னை. தேடத் தெரியவில்லை என்பதால், மொத்தத்தையும் குறை சொல்வார்களா என்ன? உமா மிஸ்ஸிடம் விளக்கினேன்.

“ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோ கதிர். நாம் எந்த நாட்டுல பிறக்கிறமோ, அது நம்மோட தாய்மண். அந்த மண் மீது ஒரு பாசம் வேண்டும். அதுவும் நம்மை மாதிரியான தேசங்கள்ல பெரும் போராட்டத்துக்குப் பின்னாடிதான் சுதந்திரக் காற்றையே சுவாசிச்சு இருக்கோம். ஒவ்வொருமுறையும் நாம் சுதந்திர தினம் கொண்டாடும்போதும், ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தறோம். இது சும்மா வந்த சுதந்திரமில்ல. இதுக்குக் கொடுத்த விலை மிகமிக அதிகம்ங்கறதை ஞாபகப்படுத்தணும். நம்ம ஊர்ல இருந்துக்கிட்டே இப்படிக் கேள்வி கேக்கறீயே? ஜானகி தேவர் பத்தி தெரிஞ்சா இதெல்லாம் கேக்கவே தோணாது.”

“யார் மிஸ் அவங்க?”

“உனக்கு நேதாஜி தெரியுமா? இந்திய தேசிய இராணுவம் தெரியுமா?”

“தெரியும் மிஸ், அதுல பெண்களுக்கான ஜான்சி ராணி படை இருந்ததுன்னுகூட படிச்சிருக்கேன். லக்ஷ்மி சேகல்னு ஒரு மிகப்பெரிய தலைவி இருந்தாங்களே மிஸ்.”

“கரெக்ட், அவங்களுக்கு அடுத்து ஒரு நபர் இருந்தாங்க, தெரியுமா?”

“நீங்க சொல்ற ஜானகியா மிஸ்?”

“கரெக்ட். இந்தியாவையே பார்க்காமல், இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்து, இந்திய தேசிய இராணுவத்துல பங்கெடுத்துக்கொண்ட அற்புதத் தலைவர் இவங்க. மலேசியாவுல மிக வசதியான குடும்பம் இவங்களோடது. 1943 ஜூலை மாசம், நேதாஜி வந்து, பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தணும்னு, எழுச்சி உரை ஆற்றியபோது, அங்கே 60,000 பேர் திரண்டிருந்தாங்க. அதுல நின்னுக்கிட்டிருந்த 16 வயசுப் பொண்ணு தான் ஜானகி. உடனே, இந்திய விடுதலைக்காக இராணுவத்துல இணைஞ்சு போராடணும்னு முடிவு செஞ்சாங்க. நகை நட்டெல்லாம் கழட்டி இந்திய தேசிய இராணுவத்துக்குக் கொடுத்துட்டாங்க. ஜான்சி ராணி படையில் போய்ச் சேர முடிவு பண்ணிட்டாங்க.

அதுல ஒரு விதி உண்டு. இப்படி பெண்கள் வந்து சேரும்போது, ஒன்று அவங்களோட பெற்றோர் அல்லது கணவரோட ஒப்புதல் வேணும். ஜானகியோட அப்பா தரமாட்டேன்னு சொல்லிட்டார். கடைசியில் சமாதானப்படுத்தி, ஒப்புதல் வாங்கி, நேதாஜியோட பெண்கள் படையில் சேர்ந்தாங்க.

1943 அக்டோபர் 22ஆம் தேதி, சிங்கப்பூர்ல, ஜான்சி ராணி படை முறையாக உருவானபோது, அதுல 500 பெண்கள் இருந்தாங்க. அதுல ஜானகியும் ஒருத்தர். லக்ஷ்மி சேகல் தான் இவங்களுக்குப் பயிற்சி கொடுத்தாங்க.

ஆயுதங்களைப் பயன்படுத்துவது, குண்டு வீசி எறிவது... என்று கடுமையான பயிற்சிகள். அன்னிக்கு இருந்த நிலையில், மிகவும் வசதியான குடும்பத்துல இருந்து வந்தவங்க ஜானகி. ஆனால், இந்தியாவுக்காக, இந்தியாவின் விடுதலைக்காக, அவ்வளவு வசதிகளையும் விட்டுட்டு, இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டாங்க. சரியாக சொல்லணும்னா, இந்தப் படையில் சேர்ந்தவங்க, மீண்டும் வீட்டுக்குப் போறதுக்கான வாய்ப்பே இல்லை. போர் ஏற்பட்டால் வீரமரணம்தான்.

பிற்காலத்துல, இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த ஆண்கள், சில பேர், படையை விட்டு விலகிப் போனபோதுகூட, ஜான்சி ராணி படையில் இருந்த எந்தப் பெண்ணும் வெளியே போகலை. அத்தனை ஈடுபாடு. அதுக்குப் பேருதான் தேசபக்தி.

இந்தியா தன்னோட நாடு. அது பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கு. அதை எப்படியேனும் மீட்டுவிட வேண்டும் என்ற துடிப்பு இருக்கே. அந்த உணர்வுக்கு வார்த்தைகளில்லை. அதை உணரத்தான் முடியும்.

இப்படிப்பட்டவர்களோட முயற்சியாலேயும் தன்னலமற்ற சேவையாலேயும் தான் நாம இன்னிக்கு மகிழ்ச்சியா இருக்கோம். சுதந்திரமா இருக்கோம். என்னவேணும்னாலும் பேசறோம்.

இதுக்குக் காரணமானவர்களை ஆண்டு முழுசும் நினைச்சுப் பார்க்க முடியலைனாலும், சுதந்திர தினம், குடியரசு தினத்திலையாவது ஞாபகப்படுத்திக்க வேண்டாமா? இது சுமையல்ல, உண்மையில் நாம் நம் சுதந்திரத்துக்குத் தரும் கெளரவம்.”

என்னால் பேச முடியவில்லை. என் கேள்விகளுக்காக நான் வெட்கித் தலைகுனிந்தேன். இனி, முழுமனசோடு, சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us