
நீரில் குளிப்பதுதான், புனலாட்டு விழா என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்டது. குளிப்பதற்கு ஒரு விழாவா? அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது.
ஆற்றில், கடலில் குளித்தல், புனலாட்டு விழா. பருவ மாற்றங்கள் காரணமாக மழைபொழிந்து அவற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதனை வரவேற்கும் விதமாக, மகிழ்ச்சி பொங்க, நீராடி மகிழ்வதே புனலாட்டு விழா.
புதுப்புனல் விழா என்றும் அழைக்கப்பட்டது. இதற்கு நீர்விழா, நீராட்டு, நீராட்டணி ஆகிய பெயர்களும் உண்டு. காலமாற்றத்தால் பின்னாளில், ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்பட்டது.
ஆற்றங்கரையில் இருந்த மக்கள், ஆண்டுதோறும் இவ்விழாவை கொண்டாடினார்கள். புதுவெள்ளம் வந்தவுடன், ஒருங்கே சென்று, ஒரு நாளின் பகல் பொழுதை, அவ்வெள்ளத்தில் ஆடி களித்திருக்கிறார்கள்.
நீச்சல் தெரிந்தவர்கள், ஆற்றின் ஆழப்பகுதியிலும், தெரியாதவர்கள் கரையிலும் நீராடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
யானை, குதிரைகளிலும், கால்நடையாகவும் அவரவர் வசதிக்கேற்ப இந்த விழாவிற்கு பயணம் சென்றிருக்கிறார்கள். தெப்பம், பரிசல் போன்றவை மூலம் நீரில் சென்றும் விளையாடி இருக்கிறார்கள். உணவு எடுத்துச்சென்று உண்டிருக்கிறார்கள். கடைகள் விரித்து பொருட்களை விற்பனைக்கும் வைத்திருக்கிறார்கள்.
புனலாடும்போது, காலையில் பறை ஒலிக்கப்படும். பெண்கள் பொன்,வெள்ளியால் செய்த சங்கு, நண்டு, இறவு (இறால்) ஆகியவற்றை நீரில் விட்டிருக்கிறார்கள். தங்களுக்கு வாழ்க்கையில், நல்லது நிகழ வேண்டும் என்று இவ்வாறு செய்தார்கள்.
வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை நீர். அந்த நீரை வாழ்த்துவதற்கும் போற்றுவதற்கும் இந்த விழா எடுக்கப்பட்டது.
இயற்கையை, அக்காலத்து மக்கள் வணங்கியதையே 'புனலாட்டு விழா' மெய்ப்பிக்கிறது.

