PUBLISHED ON : ஜன 02, 2017

பூம்பட்டின நாகரிகம் சோழப் பேரரசர்களின் தலைநகராகவும், துறைமுகப்பட்டினமாகவும் இருந்தது காவிரிப்பூம்பட்டினம். இது, பூம்புகார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடல்கோள் (சுனாமி) காரணமாக, இந்த நகரம் அழிந்து போனது. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ரோம் நாட்டு சுற்றுலா பயணி தாலமி, பூம்புகார் முக்கிய வணிக நகரமாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த நகரை, 'கபேரிஸ் எம்போரியான்' என்று கூறியுள்ளார்.
திருச்சியை அடுத்த உறையூர், சோழர்களின் தலைநகராக இருந்தது. கரிகாலன், பூம்புகாரை தன்னுடைய இரண்டாவது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். பட்டினப்பாலை, அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களில், பூம்புகார் நகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பெரியதும், சிறியதுமான படகுத் துறைகளும், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடந்ததைப் பற்றியும், பட்டினப்பாலைக் குறிப்பிடுகிறது.
'நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்...
என்று நீளும் அந்தப் பாடலில், எந்தெந்த ஊர்களில் இருந்து, என்னென்ன பொருட்கள் வந்தன என்பது பட்டியலிடப்படுகிறது.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
* அரேபியாவில் இருந்து, கடல் வழியாகக் குதிரைகள் வந்தன.
* ஏற்றுமதிக்காகச் சேரநாட்டுப் பகுதிகளிலிருந்து, தோணிகளில் கருங்கறி என்று சொல்லப்படும் மிளகு மூட்டைகள் வந்தன.
* கலிங்கப்பகுதியில் (தற்போதைய ஒடிசா) இருந்து, பொன்னும் மணியும் வந்திறங்கின.
* பாண்டிநாட்டுத் துறையிலிருந்து, முத்துகள் வந்தன.
* ஈழத்திலிருந்தும், காழகத்தில் (தற்போதைய மியான்மர்) இருந்தும், சில பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
காற்று வருவதற்காக, மான் கண்போலச் ஜன்னல் வைத்த மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன. நகரில் பொருட்களை கூவி விற்கும் வணிகர்கள், பொருட்களைச் சேமித்து வைத்திருந்த பண்டக சாலைகள் இருந்தன.
பட்டு, பருத்தி போன்றவற்றின் நூல்களால், நுட்பமாகத் தைக்கும் காருகர் எனப்படும் தையற் கலைஞர்கள் இருந்தார்கள். உணவுப் பொருட்களை வகை வாரியாகப் பிரித்து, விற்பனை செய்யும் கூல வீதி இருந்தது. அந்த வீதியில் கள்ளை விற்கும் மகளிர், மீனை விற்கும் பரதவர், உப்பு, வெற்றிலை, வாசனைப் பொருட்களை விற்கிறவர்கள், பலவகை மாமிசங்களை விற்பவர்கள் நிறைந்திருந்தார்கள்.
வெண்கலத் தட்டார், செம்புத் தட்டார், மரத் தச்சர், இரும்புக் கன்னார், குயவர், மண் அச்சுகளை செய்து தருபவர், பொற்கொல்லர், தோல் பொருட்கள் செய்பவர்கள், சித்திரக்காரர்கள், பொம்மைகள், பாவைகள் செய்பவர்கள், வினைவலர் வீதியில் இருந்தனர். நாளங்காடி (பகல் நேரச் சந்தை), அல்லங்காடி (இரவு நேரச் சந்தை) என, பெருநகர் ஒரு பெரும் வணிகக் கூடமாகத் திகழ்ந்திருக்கிறது.
குழல், யாழ் இசைக் கருவிகளை மீட்டுபவர்கள், பாணர் வீதியில் வசித்தனர். இவர்களைத் தவிர, அரசர்கள் வாழும் வீதி, தேரோடும் வீதி, பார்ப்பனர்கள், உழவர்கள், மருத்துவர்கள் வாழும் வீதி என, முறைப்படி வீதிகள் பிரிக்கப்பட்டிருந்தன.
பட்டினப்பாக்கத்தில், குதிரைக்காரர்கள், யானைப்பாகர்கள், தேரோட்டிகள், பெரு வணிகர்கள் வசித்தனர். மருவூர்ப்பாக்கத்தில், சாதாரணப் படைவீரர்கள், சாதாரண கணிகையர் வசித்தனர்.
சட்டம் ஒழுங்குக்கு ஐந்து மன்றங்கள்
* வெள்ளிடை மன்றம்,
* இலஞ்சி மன்றம்,
* பூத சதுக்கம்,
* நெடுங்கல் நின்ற மன்றம்,
* பாவை மன்றம்
பின்பற்றிய மதங்கள்
* சமணம்
* பௌத்தம்
* சைவம்
* வைணவம்.
இந்திர விழா
பூம்புகாரில், இந்திர விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அரசனே விழாவை முன்னின்று நடத்தியுள்ளான். இந்திரனுக்கு விழா எடுக்கும் நாட்களில், அந்நகரத்தில் இருக்கிற எல்லாத் தெய்வங்களுக்கும், விழா எடுக்கப்படும் மரபு கடைப்பிடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் எடுக்கும் இந்த விழா, அரசன் ஊரில் இல்லாத காரணத்தால், நடத்தப்படவில்லை. அதனால் கடல் பொங்கி, நகர் அழிந்ததாய் காரணம் சொல்லப்படுகிறது.

