
வாழ்ந்த காலம்: 02.01.1920 - 06.04.1992
பிறந்த ஊர்: பெட்ரோவிச்சி, ரஷ்யா.
சாதனை: அறிவியல் புனைகதைகள் எழுதியது.
ஆறு சூரியன்கள் ஓயாமல் வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கும் ஒரு கிரகத்தில், திடீரென்று இருட்டு வரப்போகிறது; 2049 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அந்த இருட்டு, மக்களை என்ன செய்யப் போகிறது. இது, நைட்ஃபால் என்கிற, உலகின் மிகச்சிறந்த அறிவியல் புனைகதையின் கரு. இதை எழுதியவர் ஐசக் அசிமோவ்.
'படிப்பது வீண் வேலை; தொழிலைப் பார்' என்று அசிமோவின் அப்பா சொல்லிக்கொண்டே இருப்பாராம். குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து மிட்டாய் கடை நடத்த, இவரோ எழுத்து, படிப்பு மீது ஆர்வம் செலுத்தி, 5 வயதில் தானாகவே, எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார். சிறுவனாக இருந்தபோதே, அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கி, 11 வயதில் நாளிதழ்களில் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்.
பிரபலமான பிறகு, தானே ஒரு பத்திரிகையைத் தொடங்கி, வாசகர்கள் கேட்கும் அறிவியல் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவர் எழுதி வெளியிடப்படாத தாள்கள் மட்டும், 464 பெட்டிகளில் 232 அடி அலமாரியில், பாஸ்டன் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அசிமோவ், எந்நேரமும் எழுதிக்கொண்டே இருந்ததற்கான சான்று இது!
ரோபோக்களுக்கு அவர் வகுத்த மூன்று விதிகள்:
* மனிதர்களைக் காயப்படுத்தக் கூடாது.
* மனிதர்களுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.
* தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விதிகளை, தன்னுடைய கதைகள் மூலமே வகுத்தார். இவரது ரோபோ கதைகள், 'ஐ ரோபோ' என, ஆங்கிலத்தில் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ரோபோடிக்ஸ் என்கிற வார்த்தையை முதன்முதலில் கதைகளில் தந்ததும் அவர்தான். 
வானவியல், உயிரியல், கணிதம், மதம், இலக்கியம் போன்ற துறைகளில் குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை படைத்துள்ளார்.

