PUBLISHED ON : மே 23, 2016

சாலையில், ஓடாமல் நின்றுபோன வாகனத்தைப் பின்னால் இருந்து சிலர் தள்ளிக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச தூரம் தள்ளியதும் வாகனம் இயங்கி ஓடத் தொடங்கும். அதைப் பார்த்திருக்கிறீர்களா? ஓடாமல் நின்றுபோன வாகனம், பின்னாலிருந்து தள்ளி விடும்போது மட்டும் எப்படி இயங்குகிறது? வாகனத்தில் சாவியைப் போட்டுத் திருகியதும் அதன் மின் மோட்டார் இயங்குகிறது. எஞ்சினில் உள்ள எரிபொருள் மூலம் எரியூட்டுதல் சுழற்சி நடைபெறுவதால் வாகனம் இயங்குகிறது. மின் மோட்டார் இயங்காவிட்டாலோ, மின்கலன் (பேட்டரி / Battery) திறன் குறைந்திருந்தாலோ வாகனம் இயங்காது. எஞ்சினில் உள்ள பிஸ்டன்கள் (Pistons) சரியாக இல்லையென்றாலும் வாகனம் ஓடாது. இந்த நிலையில் வாகனத்தை தள்ளி இயக்க முயல்கிறோம். வாகனத்தைத் தள்ளுவதால் சக்கரங்கள் சுழல்கின்றன. இந்தச் சுழற்சி பற்சக்கர அமைப்பை (கியர் / Gear) சுழலச் செய்கிறது. பற்சக்கர அமைப்புடன் இணைந்த 'வணரித் தண்டு' (கிராங்க் ஷாப்ட் / Crank Shaft) தள்ளப்பட்டு, வாகனம் இயங்கத் தொடங்குகிறது. வாகனம் பற்சக்கர அமைப்போடு சேராமல் இருந்தால் அது இயங்காது. அந்நிலையில் வாகனம் வணரித் தண்டுடன் சேராமல் சக்கரங்கள் மட்டுமே சுழலும். இதனால் வாகனம் ஓடாது.
அடுத்தமுறை வாகனங்களை யாராவது தள்ளி இயக்க முயலும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் அவர்களுக்கு உதவுவீர்கள்தானே!

