
'புளூடூத்' (Bluetooth) - இதற்கும் பல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், தொடர்புக்கும் இதற்கும் பல தொடர்புகள் உள்ளன. வாழ்க்கையில் சிலவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம். ஆனால், அதன் பின்னணியில் என்ன இருக்கிறது? அதன் தொழில்நுட்பம் என்ன? போன்றவற்றை அறிந்துகொள்ள, பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை.
புளூடூத் என்றால் 'அது போன்ல இருக்கும்... பாட்டு, படம் எல்லாம் பகிரலாம்' என்கிற அளவுக்குத்தான் நமக்குத் தெரியும். ஆனால், இது பிலாட்டன் (Blatann ) எனும் ஸ்காண்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம். பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க் மற்றும் நார்வேயின் சில பகுதிகளை ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். அவருக்கு ஹெரால்ட் புளூடூத் என்ற பெயரும் உண்டு. அதுமட்டும் இல்லாமல் 'புளுபெர்ரி பழங்களைத் தின்றதால் அந்த மன்னரின் பற்கள் நீல நிறத்தில் இருந்தன' என்கிற கதையும் உண்டு!
மன்னரின் பெயரை இதற்கு ஏன் வைக்க வேண்டும் என்கிற கேள்வி எல்லாருக்கும் எழும். பிரிந்து கிடந்த நாடுகளை ஒன்றாக இணைக்க இந்த மன்னர் முயற்சி எடுத்தார். அதனால்தான், இணைக்கும் இந்தத் தொழில்நுட்பத்திற்கு அவருடைய பெயரை வைத்தார்கள்!
ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற 'புளூடூத்' பயன்படுகிறது. இதற்கு, குறைந்த அலைவரிசை உடைய ரேடியோ அலைகள் தேவை. இது, 2400 முதல் 2480 மெகா ஹெர்ட்ஸ் அளவு இருக்கும். வயர்லெஸ் பெர்சனல் ஏரியா நெட்வர்க் (WPAN - Wireless Personal Area Network) எனப்படும் பாதுகாப்பான குறுகிய பரப்பில்தான் இது செயல்படும்.
ஒரு தகவலை அனுப்ப இரண்டு கருவிகளுக்கு இடையே தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு, அனுப்ப வேண்டிய தகவல்கள் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. பிரிக்கப்பட்ட பகுதிகள் வரிசையாக ஒவ்வொன்றாகப் பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்டு ப்ரோட்டோகால் (Packet - Based protocol) என்கிறார்கள். இதில், சீரான பரிமாற்றம் நடைபெறும்.
மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, பிரின்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை இயக்குவது என இதன் பயன்பாடு இல்லாத இடமே இல்லை!
* எரிக்ஸன் நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தை 1994ல் முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர், நோக்கியா, இன்டெல், ஐ.பி.எம்., தோஷிபா ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்வடிவம் கொடுத்தன.
* மைக்ரோவேவ் ரேடியோ அலைகள் இருப்பதால், இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளைக் காதில் மாட்டுவது உடல் நலத்திற்குக் கெடுதல் என்பது பாதுகாப்பு எச்சரிக்கை.

