
கேரட் என்றதும் நம் நினைவுக்கு ஆரஞ்சு நிறம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் ஊதா, வெள்ளை, மஞ்சள், சிவப்பு என பல நிறங்களிலும் கேரட் உண்டு.
இன்று நாம் பயன்படுத்தும் கேரட்டின் தாயகம் பண்டைய பாரசீகம். அதாவது, இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள்.
கேரட் கிழங்கு வகையைச் சேர்ந்தது. கேரட்டின் மேல் பாகத்தில் உள்ள பசுமையான இலை 1 மீட்டர்வரை வளரும். இதன் வெள்ளைப் பூக்கள் கொள்ளை அழகு. இப்படி பூ, தண்டு, இலை, கிழங்கு என பல வண்ணங்களில் கண்களைக் கவரும் கேரட் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.
கேரட்டில் 88 சதவீதம் தண்ணீர், 7 சதவீதம் சர்க்கரை, மற்றும் புரதம், நார்ச் சத்துகள் அடங்கி உள்ளன. கொழுப்பு 0.2 அளவில் மட்டுமே உள்ளது. கண் பார்வைக்குத் தேவையான வைட்டமின் 'ஏ'அதிகம் நிறைந்த காய்கறி கேரட்.
உலகில் மிக அதிக அளவில் கேரட் பயிர் செய்வது சீனாதான். அடுத்து ரஷ்யா. மூன்றாவதாக அமெரிக்கா. உலகில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த காய்கறிகளில் கேரட் டாப் டென் பட்டியலில் உள்ளது.
கேரட் ஜூஸ், அல்வா, பொரியல், சாம்பார், பச்சடி, ஜாம் என பல்வேறு வகைகளில் உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.
அதிக பட்மாக 17 அடி நீளம், எட்டரை கிலோ எடை கொண்டதாக வளர்ந்திருக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து கோயில்களில் ஊதா நிற கேரட் ஓவியங்கள் இருந்ததாக கண்டறிந்து இருக்கிறார்கள். ரோம, கிரேக்க வரலாற்றில் கேரட் மருந்து பொருளாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

