
மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் உங்களை, வானத்தில் இருந்து யாராவது படம் எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் மேலே இருந்தபடி படம் எடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு கேமரா கண். அதை உங்களுக்குத் தெரியாது. ஆனால், அதற்கு உங்களை நன்றாகத் தெரியும்.
கூகுள் மேப்ஸ் (Google Maps), யாஹு மேப்ஸ் (Yahoo Maps) போன்ற உலக வரைபட இணையதள செயற்கைக் கோள்களின் கண்கள்தான் அவை! அதுபோன்ற ஓர் இணையதள வரைபடம்தான் விக்கிமேப்பியா (WikiMapia)! இது கூகுள் வரைபடங்களை இணைக்கிறது. இதன்மூலம், நண்பன் வீட்டு மொட்டை மாடியையும் 'கழுகுப் பார்வை' பார்க்க முடியும். அது 'என் நண்பனின் வீடு' என்று குறிப்பு எழுதவும் முடியும்!
முழு உலகத்தையும் படம் காட்டி விளக்கும் நோக்கத்துடன் மே 24, 2006ல் இது தொடங்கப்பட்டது. இதை, அலெக்சாண்டர் கொரியாகினே (Alexandre Koriakine) மற்றும் எவ்கேனி சவேலியெவ் (Evgeniy Saveliev ) ஆகியோர் உருவாக்கினார்கள். அமேசான் காடுகளை மட்டுமல்ல, நம் ஊர் வயல்வெளி மற்றும் பல முக்கியமான இடங்களையும் முப்பரிமாணத்தில் பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை 360 டிகிரி கோணத்தில் சிறு சிறு பகுதிகளாக லட்சக்கணக்கான புகைப்படங்கள் எடுத்து, முப்பரிமாண (3D) வடிவத்தில் ஒருங்கிணைப்பார்கள். அதைப் பார்க்கும்போது, வானத்தில் பறந்து சுற்றிப் பார்ப்பதுபோல அனுபவம் கிடைக்கும்.
இந்தியாவில் இதன் பயன்பாடு அசுர வேகத்தில் இருக்கிறது. இதில் பிரச்னைகள் பல இருந்தாலும் நகரப்புறங்கள், வீதிகள், சாலைகள், முக்கியமான இடங்கள் என லட்சக்கணக்கான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், புதிதாகச் செல்லும் ஊருக்கு வழிகாட்ட ஆள் தேவையில்லை. நம் ஸ்மார்ட்போனில் இந்த மேப் இருந்தால் போதும்!
பார்க்க: www.wikimapia.org/

