
உயிரினங்களை ஆய்வு செய்த முன்னோடி விஞ்ஞானி நான். தாவரவியலாளராகவும் விலங்கியலாளராகவும் மருத்துவராகவும் இருந்து புதிய அறிவியல் வகைப்பாட்டு (Scientific classification) முறைக்கும் பெயர் முறைக்கும் (Nomenclature) அடிப்படைகளை உருவாக்கினேன். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்மாலேண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் பிறந்தேன். என் தந்தை ஒரு பாதிரியார். என்னையும் மதகுரு ஆவதற்குப் படிக்கச் சொன்னார். அதில் எனக்கு விருப்பம் இல்லை. என் ஆர்வமெல்லாம் தாவரங்களைப் பற்றி ஆய்வு செய்வதில் இருந்தது.
மருத்துவராக இருந்த உறவினர் ஒருவரின் தூண்டுதலால் லுண்ட் (Lund) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ஓர் ஆண்டிற்குப் பின் உப்சாலா (Uppsala) பல்கலைக்கழகத்துக்கு மாறினேன். அங்கே, பூக்களில் உள்ள பாலுறுப்புக்கள் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தபின், அதுபோன்ற கட்டுரை ஒன்றை நானும் எழுதினேன். அதன் மூலம் தாவரவியல் பூங்காவில் வேலை கிடைத்தது.
தொடக்கத்தில், தாவரங்களுக்கு 'பல சொற்பெயரிடு முறை' இருந்தது. அந்த முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, 1623ஆம் ஆண்டு, காஸ்பர்டு பாஹின் (Gaspard Bauhin) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறையை அறிமுகப்படுத்தினார். அதே முறையைப் பின்பற்றி, உயிரினங்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை நானும் வகைப்படுத்தினேன். அதை வைத்து 'ஸ்பீசிஸ் ப்ளான்டாரம்' (Species Plantarum) என்கிற நூல் ஒன்றையும் எழுதினேன்.
லாப்லேண்ட் (Lapland) ஆய்வுப் பயணம் 1732ல் தொடங்கியது. அதில் செல்ல உப்சாலா அறிவியல் அகாடமியில் இருந்து எனக்குப் பொருள் உதவி கிடைத்தது.
உயிரினங்களை தாவரங்கள், விலங்குகள் என இரு பெரும் திணைகளுக்குள் (Kingdom) கொண்டு வருவது வகைப்பாட்டின் முதல் படி. திணைகளுக்கு அடுத்து பல்வேறு வகுப்புகள் (Class) வரும். வகுப்புகளின் கீழ், நிறைய வரிசைகள் (Order) இருக்கும். வரிசைகளின் கீழ் பேரினங்கள் (Genus) வரும். பேரினத்துக்குள் (Species) தனித்தனி இனங்கள் வரும். இதில், நான் வகைப்படுத்தியது 4,400 விலங்கினங்களையும் 7,700 தாவர இனங்களையும் மட்டுமே.
ஆனால், நான் ஏற்படுத்திக் கொடுத்த முறையில் ஓரிரு படிகளைச் சேர்த்தால் வகைப்படுத்தாமல் விடுபட்ட பிற உயிரினங்களையும் சேர்க்க முடியும். இதனால்தான் என்னை 'நவீன வகைப்பாட்டியலின் தந்தை' (Father of Modern Taxonomy) என்று அழைக்கிறார்கள். இந்த வகைப்பாட்டு முறையை உயிரியலாளர்கள் 'லின்னேயன்' முறை என்றுதான் இன்றும் சொல்கிறார்கள்!
கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus)
பிறப்பு: மே 23, 1707
மறைவு: ஜனவரி 10, 1778

