
சமீப காலமாக எல்லா நாளிதழ்களிலும் தவறாமல் இடம்பெறுகிற கணிதப் புதிர் - சுடோகு (Sudoku). சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் எந்நேரமும் 'பிஸி'யாக வைத்திருக்கும் கணிதப் புதிர் இது.
சுடோகு புதிர்கள், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து புழக்கத்துக்கு வந்தன. சுடோகு புதிருக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் 'நம்பர் பிளேஸ்' (Number Place). இதை வடிவமைத்தவர் ஹோவர்ட் கார்ன்ஸ் (Howard Garns) என்ற அமெரிக்கர். 'டெல் மேகசின்ஸ்' (Dell Magazines) என்ற பத்திரிகை இதை 1979-ல் வெளியிட்டது.
ஜப்பானில் 1984-ல்தான் இது அறிமுகமானது. 'நிகோலி' (Nikoli) என்ற நிறுவனம் தனது 'நிகோலிஸ்ட்' Nikolist' பத்திரிகையில் வெளியிட்டது. ஜப்பானில் இந்தப் புதிருக்கு 'சுஜி வா டோகுஷின் நி காகிரு' (Suji wa dokushin ni kagiru) பெயர். இந்த வார்த்தைகளுக்கு 'ஒற்றை இலக்க எண்கள் மட்டும்' என்று பொருள்.
'மகி கஜி' (Maki Kaji) என்பவர், இந்தப் பெயரைச் சுருக்கி 'Su-Do-Ku' என்று பெயரிட்டார். அதன்பிறகு ஜப்பானில் 'Su-Do-Ku' என்ற வார்த்தை பதிவு செய்யப்பட்ட வர்த்தகக் குறி (Trademark) ஆனது. சுடோகு புதிர் நம்பர் பிளேஸின் சுருக்கமான 'நம் பிளா' (Num Pla) என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.
பேப்பரும் பென்சிலுமாக மக்களைக் கிறுக்குப்பிடித்து அலையவைத்த சுடோகு புதிர் 2006ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவியது. அந்த ஆண்டு பென்சில் விற்பனை ஒரே ஆண்டில் ஏழு சதவிகிதம் அதிகரித்ததற்கு சுடோகு புதிர்தான் காரணம் என்று 'தி இண்டிபெண்டன்ட் ஆஃப் லண்டன்' (The Independent of London) பத்திரிகை தெரிவித்திருக்கிறது.