PUBLISHED ON : மார் 11, 2019
வரலாற்று வகுப்பில், ஆசிரியர் சுவையாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இடையில் ஒரு தலைவரைப்பற்றி விவரித்தபோது, 'அவர் அறிவுடைநம்பியைப்போல் திகழ்ந்தார்' என்றார்.
மாணவர்கள் குழம்பினார்கள், 'அறிவுடைநம்பியா! யார் அவர்?'
அவர்களுடைய குழப்பத்தை ஆசிரியர் புரிந்துகொண்டார், ''உங்களுக்கு அறிவுடைநம்பியைப் பற்றித் தெரியாதில்லையா? முதலில் அதை விளக்குகிறேன், அதன் பிறகு, நீங்களே இந்தத் தலைவரைப் பற்றிப் புரிந்துகொள்வீர்கள்.'' என்றார்.
''அறிவுடைநம்பி என்பவர் பழங்கால பாண்டிய மன்னர். பல நூல்களைக் கற்றறிந்தவர். சிறந்த புலவர்களோடு பழகியவர். அவரே பல செய்யுட்களையும் எழுதியிருக்கிறார். அந்த அறிவுடைநம்பிக்குப் பல எதிரிகள் இருந்தார்கள். அவர்கள் பாண்டியனை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று துடித்தார்கள்.
அறிவுடைநம்பி எப்போதும் நூல்களைக் கற்றுக் கொண்டிருப்பதால், அவருக்குப் போர்க்கலைத் தெரியாது என்று எதிரிகள் நினைத்தனர். அவர் வெறும் புத்தகப்புழு, அவரை எளிதில் அழித்துவிடலாம் என்று படையெடுத்து வந்தார்கள். ஆனால், அறிவுடைநம்பி, தன்னை எதிர்த்து வந்த மன்னர்களையெல்லாம் ஓடஓட விரட்டி, பெரும் வெற்றி பெற்றார்.
நூலறிவு, செயல்திறன் இரண்டிலும் சிறந்து விளங்கினார் அறிவுடைநம்பி. அவரைப்போல இந்தத் தலைவரும் சிறப்பான பணிகளைச் செய்திருக்கிறார். அதனால் தான், இவர் அறிவுடைநம்பியைப்போல் சிறந்தவர் என்று சொன்னேன்'' என விளக்கினார் ஆசிரியர்.
''இப்போது புரிகிறது ஐயா'' மாணவர்கள் மகிழ்ந்து தலையாட்டினார்கள்.
பாடத்தின் நடுவில் 'அறிவுடைநம்பி'யின் கதையை மேற்கோள் காட்டினார் ஆசிரியர். அந்தக் கதையை அறியாத மாணவர்களுக்கு, மேற்கோள் விளங்குவதில்லை. கதையை விவரித்தபின், புரிந்துகொண்டு நன்கு கற்கிறார்கள்.
இதுபோல, பழந்தமிழ்ப் பாடல்களில் பல மேற்கோள் கதைகள் வருகின்றன. அந்தக் கதைகளெல்லாம் புலவர்கள் வாழ்ந்தபோது, மக்கள் மத்தியில் நன்கு புகழ்பெற்றவையாக இருந்திருக்கும். ஆனால், நாமோ, பாடல் எழுதப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அப்பாடலை வாசிக்கிறோம். நமக்கு அந்தக் கதைகள் தெரியாது. எனவே, புலவர் என்ன சொல்ல வருகிறார் என்று குழம்புகிறோம்; அறிவுடைநம்பியைப் பற்றித் தெரியாத மாணவர்களைப் போல!
இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக, கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர், இதுபோல் தமிழ்ப் பாடல்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் கதைகளைச் சேகரித்துத் தொகுத்து, அகரவரிசையில் வெளியிட்டிருக்கிறார். 1,200க்கும் மேற்பட்ட சுவையான கதைகளைக் கொண்டது இந்நூல்.
இணையத்தில் மேற்கோள் கதைகளை விலையின்றி தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
http://tinyurl.com/qstry01
http://tinyurl.com/qstry02
- என். சொக்கன்
