PUBLISHED ON : பிப் 27, 2017

ஒடிசா மற்றும் ஆந்திரக் கடற்கரை ஓரங்களில் காணப்படும் ஆலிவ் ரிட்லி (Olive Ridley turtles) எனப்படும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் திடீரென இவ்வகை ஆமைகள் பல்கிப் பெருக ஆரம்பித்துள்ளன. ஒரு வார காலத்திற்குள் இக்கடற்கரைப் பகுதிகளில் இந்த ஆமைகள் மூன்றரை லட்சம் முட்டைகள் வரை இட்டுள்ளன. இம்மாதத்தின் பிற்பகுதியில் ஆலீவ் ரிட்ஸ் ஆமைகள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு வந்தன. ரிஷிகுல்யா நதி, கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் மண்ணில் முட்டையிடத் தொடங்கின. இதுவரை 3.5 லட்சம் முட்டைகள் வரை கண்டறியப்பட்டுள்ளதாகவும், எண்ணும் பணி முடிவடையும்போது, இந்த எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டும் என்றும் வனத்துறை அலுவலர் ஆஷிஷ்குமார் நம்பிக்கை தெரிவித்தார். ஆமை முட்டைகள் கண்டறியப்பட்டுள்ள கடற்கரைப் பகுதியில் வேலிகள் அமைத்தும், கடலுக்குள் ரோந்துப் படகுகள் மூலமாகவும் கண்காணிக்க வனத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

