உலக அளவில் ஆண்டுதோறும் 13 ஆயிரம் கோடி டன் அளவுக்கு உணவு வீணாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடின்பர்க் (Edinburgh) நகரப் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20% உணவு தேவைக்கு அதிகமாக உண்பவர்களால் வீணாவதாகக் கணக்கிட்டுள்ளது. 9% உணவு கெட்டுப் போய்விடுவதால் தூக்கி எறியப்படுகிறது. தேவைக்கு அதிகமாக உண்பது (over eating) என்பது பசிக்குத் தேவைப்படுவதைவிட அதிகமாக உண்பதை மட்டும் குறிக்கவில்லை. சிலவகை உணவுகள் தயாரிப்பதற்கே மிகவும் செலவு பிடிக்கும். எடுத்துக்காட்டாக கால்நடைகளின் பால், இறைச்சி, முட்டை போன்ற உணவுகளைத் தயாரிக்கவே நிறைய விளைபொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது கால்நடைகளுக்குத் தாவர விளைபொருட்களை உணவாகக் கொடுத்து, பிறகு அவற்றிலிருந்து பால், முட்டை, இறைச்சி போன்றவற்றை உருவாக்குவது என்ற உணவு சுழற்சி, செலவுமிகுந்த ஒன்று. இவ்வகையில் மட்டும் 2.1 ஆயிரம் கோடி டன் வரை தாவர விளைபொருட்கள் செலவாகின்றன.

