PUBLISHED ON : ஜூலை 10, 2023

அகாரிகஸ் பிஸ்போரஸ் (Agaricus bisporus) ஓர் உண்ணத்தகுந்த காளான்.
உண்மை. டேபிள் மஷ்ரூம் (Table mushroom), பட்டன் மஷ்ரூம் (Button mushroom) என்றும் இது அழைக்கப்படுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பிய புல்வெளிப் பகுதிகளில் உருவான காளான் இனம் இது. இன்று உலகம் முழுதும் பிரபலமாகி உள்ளது. உணவுக்காக, வணிக ரீதியில் 70க்கும் அதிகமான நாடுகளில் பயிரிடப்பபடுகிறது.
100 கிராம் அளவுடைய காளானில் 22 கலோரி ஆற்றல் உள்ளது. மேலும் இதில், பி வைட்டமின்கள்-, ரிபோஃபிளேவின், நியாசின், பாண்டோதனிக் அமிலம், வைட்டமின் டி ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.
பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்கள்.
தவறு. பூஞ்சைகள் பல செல்களால் ஆன 'யூகேரியாட்' செல் அமைப்பைக் கொண்டவை. இவற்றின் உடல், ஹைப்பாக்கள் எனும் பூஞ்சை இழைகளால் ஆனது. ஒன்றிற்கும் மேற்பட்ட பூஞ்சை இழைகள் இணைந்து, 'மைசீலியம்' எனப்படும் இழைப் பின்னலை உருவாக்குகின்றன. ஈஸ்ட் போன்ற சில வகைப் பூஞ்சைகள் மட்டும், ஒரு செல்லால் ஆனவை. பூஞ்சையின் செல் சுவர், 'கைட்டின்' என்ற வேதிப்பொருளால் ஆனது. பூஞ்சைகளில் பச்சையம் கிடையாது. எனவே, பிறசார்பு உணவூட்ட முறையைப் பின்பற்றுகின்றன.
