PUBLISHED ON : டிச 03, 2018

அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்களிடம் இருந்து எடுத்து, இல்லாதவர்களுக்கு கொடுப்பவரே ராபின் ஹூட். அவரது பெயரில் படை அமைத்துள்ள இந்திய இளைஞர்களும் அதே பணியைச் செய்து, மக்கள் மனத்தை கவர்ந்து வருகின்றனர்.
'ராபின்ஹூட் ஆர்மி' என்ற பெயரில், ஏழை எளிய மக்களுக்காக உணவைச் சேகரித்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ராபின் ஹூட் போல் பச்சை உடையில் வலம் வரும் இவர்களது நெட்வொர்க், உலக அளவில், 80க்கும் அதிகமான நகரங்களில் பரந்து விரிவடைந்துள்ளது. தினமும் 2.50 லட்சம் பேருக்கு உணவளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, ராபின்ஹூட் ஆர்மி இயக்கத்தின் நிறுவனரான நீல் கோஸ் கூறும்போது, “நான், 2014இல், போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில், சொமேட்டோ (Zomato) நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, உள்ளூர் குழுவினர் சிலர், உணவகங்களில் இருந்து, எஞ்சிய உணவுப்பொருட்களை வந்து வாங்கிச் செல்வர்.
நான் எதற்காக என்று விசாரித்ததில், ஏழைகளுக்கு அதைக் கொண்டுபோய் கொடுப்பதாகச் சொன்னார்கள். உணவகங்களில் வாங்கிச் செல்லும் உணவை எங்கு வைக்கிறார்கள், அதைப் பிரித்து மக்களுக்கு எப்படி வினியோகிக்கிறார்கள் என்று யோசித்தேன். லாஜிஸ்டிக்ஸ் எப்படி சாத்தியமாகிறது என்ற ஆவல் ஏற்பட்டதும், அந்தச் சமூக சேவை இயக்கத்தில் இணைந்து கொண்டேன்.
அங்கு தன்னார்வலராகப் பணியாற்றியபோது, ஏராளமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். மிகச்சிறந்த நெட்வொர்க்கிங் அமைப்பையும், தன்னார்வலர் குழு நிர்வாக முறையையும் அவர்கள் கொண்டிருந்தனர். எளிய வழியில், பெரும் பணியை ஆற்றிக்கொண்டிருந்தனர்.
இந்தியா திரும்பியவுடன், எனது நண்பர் ஆனந்தை தொடர்புகொண்டு, இதுதொடர்பாக ஆலோசித்தேன். ஏழைகள் அதிகமாக உள்ள இந்தியாவிலும், இத்திட்டத்தைச் செயற்படுத்திப் பார்க்கலாமே என்று சொன்னேன்.
முதலில், டில்லியில் உள்ள ஹாஸ் கௌஸ் பகுதியில் எங்கள் பணியை ஆரம்பித்தோம். இதற்காக, உணவகங்களை அணுகியபோது, பலரும் மனமுவந்து ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.
களத்தில் நாங்கள் கணித்ததைவிட உணவுத்தேவை மிக அதிகம். அதற்கேற்ற அளவு, உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், எதிர்பாராத திசைகளில் இருந்து, உதவிகள் ஏராளமாகக் குவிய ஆரம்பித்தன. எங்கள் சேவையைப் சமூக வலைத்தளங்கள் மூலம் பார்த்து, தங்கள் நகரிலும் இதன் கிளையை உருவாக்க தன்னார்வலர்கள் முன்வந்தார்கள்.
இப்போது, 16 ஆயிரம் தொண்டர்களுடன், 80 நகரங்களில் கிளைபரப்பி செயற்பட்டு வருகிறோம். ஆப்பிரிக்காவையும், லத்தீன் அமெரிக்காவையும் அடுத்த இலக்காக வைத்திருக்கிறோம். இப்பணியைச் சிறப்பாக எடுத்துச்செல்ல, அடுத்த தலைமுறை இளைஞர்களை தயார்படுத்தி வருகிறோம்.
சமீபத்தில், கேரள வெள்ளத்தின்போது, இண்டிகோ விமானத்துடன் இணைந்து மக்களுக்கு உணவை வினியோகிக்கும் பணியைச் செய்தோம். அடுத்தகட்டமாக, பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களைப் படிக்க வைக்கும் முயற்சியிலும் எங்கள் குழுவை ஈடுபட வைக்க உள்ளோம்.” என்றார்.
