
இந்திய அணிக்காக ஆடும் இளம் கிரிக்கெட் வீரர் இவர். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
1999ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்த இந்த இளம் வீரருக்கு, சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி மிகவும் பிடித்த வீரர்கள்.
இவரின் தந்தை லக்விந்தர் சிங் (Lakhwinder Singh), பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக, விளையாட்டை அவரால் தேர்வு செய்ய முடியவில்லை. அதனால், தன் மகன் மூலம் அக்கனவை நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார்.
அதற்காக பஞ்சாப் மாநிலம், ஜெய்மல்சிங் வாலா கிராமத்தில் இருந்து மொகாலிக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள ஒரு மைதானத்திற்கு தினமும் தன் மகனை அழைத்துச் செல்வார். தன் மகனுடன் விளையாடி அவரை 'அவுட்' ஆக்கும் இளம் வீரர்களுக்கு, அவர் நூறு ரூபாய் பரிசாகத் தருவார்.
ஐ.பி.எல்.லில் அதிக ரன் எடுத்த விராத் கோஹ்லியின் சாதனையை, இந்த இளம் வீரர்தான் முறியடிக்கக்கூடும் என்று கடந்த வாரம் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
சென்ட்டிமென்ட்டாக, ஆடுகளத்தில் எப்போதும் சிவப்பு நிறக் கைக்குட்டையைத் தன் இடுப்பில் செருகி வைத்திருப்பார் இந்த வீரர்.
டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்த ஆண்டு குஜராத் மோடி மைதானத்தில் 126 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஐதராபாத்தில் ஜனவரியில் நடந்த ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இவர் 201 ரன்கள் குவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் இந்த வீரர். ஆஸ்திரேலியா, ஜிம்பாவே, பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்துள்ளார். விவசாயத்தின் மீது இப்போதும் நாட்டம் கொண்ட இந்த இளம் கிரிக்கெட் வீரர் யார்?
விடை: சுப்மன் கில்

