சரித்திரம் பழகு: ரூபாய் நோட்டில் உள்ள காந்தியின் படம்
சரித்திரம் பழகு: ரூபாய் நோட்டில் உள்ள காந்தியின் படம்
PUBLISHED ON : டிச 09, 2024

ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும் காந்தியின் சிரித்த புகைப்படம், ஏப்ரல் 18, 1946ஆம் ஆண்டு டெல்லியில் எடுக்கப்பட்டது. எடுத்தவர் பெயர் தெரியவில்லை. ஆனால் காந்தியின் அந்தப் புகைப்படம் தனியாக எடுக்கப்பட்டது அல்ல. அப்போது, இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலாளராக இருந்த லார்ட் ஃப்ரெட்ரிக் வில்லியம் பெதிக் -லாரன்ஸ் (Lord Frederick William Pethick-Lawrence) என்பவருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதிலிருந்து காந்தியின் தலையை மட்டும் எடுத்து, ரூபாய் நோட்டுகளுக்குப் பயன்படுத்தினர்.
லார்ட் ஃப்ரெட்ரிக், இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அப்போது இருந்தார். காந்தி அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது.
1969ஆம் ஆண்டு காந்தியின் நூற்றாண்டை முன்னிட்டும் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெற்றது. அதில் சேவாகிராம் ஆசிரமத்தில் காந்தி அமர்ந்திருப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. 1987ஆம் ஆண்டில், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி காலத்தில், 500 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் இடம்பெற்றது. 1996ஆம் ஆண்டு முதல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் படம் இடம்பெறுகிறது.
ரூபாய் நோட்டுகளில் காந்தியைத் தவிர்த்துப் பிற தலைவர்களின் படங்களும் இடம்பெற வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், அம்பேத்கர், அப்துல்கலாம் போன்றோரின் படங்களும் இடம்பெற வேண்டும் என்று பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.