
நிலவுப் பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஞ்ஞானிகள் மறுஉருவாக்கம் செய்ய முயன்றார்கள். அதற்கென ஒரு தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. அதன் விளைவாக மனித குலத்துக்கு ஒரு தொழில்நுட்பக் கருவி கிடைத்தது. மனிதர்களின் ஆயுளையே நீட்டிக்கக்கூடிய ஒரு மருத்துவ உபகரணம். அதுதான், CAT Scan.
எக்ஸ் கதிர்களையும் கணினியையும் பயன்படுத்தி, உடல் உள்ளுறுப்புகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காண்பதற்கு உதவும் கருவியே, CAT Scan. கம்ப்யூட்டரைஸ்டு ஆக்சியல் டோமோகிராபி (Computerized Axial Tomography) என்பது, இதன் விரிவான பெயர்.
சர் காட்ஃப்ரே ஹூன்ஸ்ஃபீல்ட் என்னும் பொறியாளரும், டாக்டர் ஆலன் கார்மேக் ஆகியோரும் இதனை உருவாக்கினர். இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், 1979ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை, கண்டுபிடிப்பாளர்கள் இருவரும் பெற்றனர். இக்கருவி செழுமைப்படுத்தப்பட்ட பிறகு, கொடுத்த அதி துல்லிய படங்களின் மூலம் நோயைக் கண்டறிவது டாக்டர்களுக்கு எளிதானது. சாதாரண ஃபிலிம் எக்ஸ் ரே மூலம் காணமுடியாத குட்டியூண்டு கட்டிகள்கூட இதில் தெளிவாகத் தெரியும்.

