PUBLISHED ON : மார் 25, 2019

சங்க இலக்கியப் பாடல்களில், புலவர்கள் சொற்களை உருவாக்கும்போது, அறிவியல் தன்மையோடு உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சொல்லின் உருவாக்கத்தில், பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
சொல் உருவாக்கத்தில், பொதுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான, சிறப்புச் சொல்லாக உருவாக்கும் திறனை, பின்வருமாறு காணலாம்.
மா - எனும் சொல், பல பொருட்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். மாமரம், பெரிய, சிறப்பு, விலங்கு எனும் பல பொருட்களைக் கொண்டது. இந்த 'மா' எனும் சொல்லைக் குறிப்பிட்ட சொல்லின் பின்னாக விகுதியாகச் சேர்க்கையில், அது விலங்கு எனும் பொதுப் பொருளிலிருந்து, குறிப்பிட்ட ஒரு விலங்கை மட்டும் குறிக்கும் சிறப்புச் சொல்லாக மாறுகிறது. 'மா' எனும் சொல்லுடன் கோடு (தந்தம்) கை (துதிக்கை) எனும் சொற்களைச் சேர்க்கையில், அது கோட்டுமா, கைம்மா (தந்தத்தையுடைய, துதிக்கையுடைய விலங்கு எனும் பொருளில்) என, யானையைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாக மாறுகிறது.
முளவு (முள்) எனும் சொல்லுடன் சேர்ந்து, முளவுமா எனும்போது (முள்ளையுடைய விலங்கு) முள்ளம் பன்றியைக் குறிக்கும் சொல்லாக மாறுகிறது. இதேபோன்று வயம் (வலிமை) எனும் சொல்லுடன் சேர்ந்து, வயமா எனும்போது, அது புலி, சிங்கத்தைக் குறிக்கும் சொல்லாக மாறுகிறது.
பாய் (பாய்ந்து) எனும் சொல்லுடன் சேரும்போது, பாய்மா என்னும் குதிரையைக் குறிக்கும் சொல்லாக மாறுகிறது. இச்சொல்லாக்கத்தில், ஒரு விலங்கினுடைய செயற்பாடு, உடல் உறுப்பு, தோற்றம் எனும் அறிவியல் சிந்தனையின் அடிப்படையில் சொற்கள் அமைவதைக் காணலாம். ஒவ்வொரு சொல்லையும் உருவாக்கும்போது, இப்படித்தான் பல சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு அமைத்திருக்கிறார்கள், நம் முன்னோர்.
- க. அன்பழகன்