வலி மிகுதல் பகுதி 26 - அடுக்குத் தொடரில் வலி மிகுமா?
வலி மிகுதல் பகுதி 26 - அடுக்குத் தொடரில் வலி மிகுமா?
PUBLISHED ON : மார் 25, 2019

உணர்ச்சி மிகுதியால் ஒரு சொல்லை, ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் சொல்வோம். ஒன்றை ஏற்றுக்கொள்வதற்காக 'ஆம்' என்று சொன்னால் போதும். ஆனால், அதனை இரண்டு முறை அடுக்கிச் சொல்கிறோம். 'ஆம் ஆம்' என்கிறோம். ஆம் ஆம் என்று அடுக்கிச் சொல்வதுதான் 'ஆமாம்' என்றானது. ஒருவரை வா என்று கூப்பிடுவதைவிட, 'வா வா ' என்று கூப்பிடுவது அழுத்தமாக இருக்கிறது.
பொருள் தருகின்ற சொற்கள், இரண்டிலிருந்து நான்கு முறைகள் வரை, அடுக்கி வருவது 'அடுக்குத்தொடர்' எனப்படும். செய்யுளில் அசை நிரப்புவதற்காகவோ, இசையின்பத்திற்காகவோ, சொற்கள் அடுக்கி வரும். அச்சம், வெகுளி, விரைவு, உவகை, துன்பம் போன்ற காரணங்களுக்காகவும், சொற்கள் அடுக்கி வரும். 'பாம்பு பாம்பு' என்று அச்சத்தால் கத்துகிறோம். 'இனிது இனிது' என்று உவகையால் கூறுகிறோம்.
அடுக்குத் தொடரில் வலி மிகுதல் உண்டா ? இல்லை. ஏனென்றால் உணர்ச்சியின் வழியாக ஒன்றினை இயல்பாக அடுக்கிக் கூறுகிறோம்.
பழங்கள் கொத்து கொத்தாகப் பழுத்திருக்கின்றன.
எறும்புகள் சாரை சாரையாகச் செல்கின்றன.
ஓரெழுத்து ஒருமொழி என்பது, ஓரெழுத்தால் ஆகிய சொற்களைக் குறிக்கும். ஓரெழுத்து ஒருமொழி அடுக்கி வந்தால், அங்கே மட்டும் வலிமிகுதல் உண்டு.
தீத்தீத்தீ என்று அலறினான்.
பூப்பூவாய்ப் பூத்திருந்தது.
தீ, பூ போன்றவை ஓரெழுத்து ஒருமொழிகளால் ஆகிய பெயர்ச்சொற்கள் என்பதால், அங்கே வலி மிகுந்தது.
வினைச்சொற்களில், கட்டளைப் பொருள் தரும் சொற்கள் அடுக்கி வந்தால், அங்கே வலி மிகுதல் இல்லை. பாடு பாடு, பேசு பேசு.
வியங்கோள் வினைமுற்றுகளிலும் அடுக்குத் தொடருக்கு வலி மிகுவதில்லை. கூறுக கூறுக, தேடுக தேடுக.
எச்சவினைகள் அடுக்கி வருகையில் அங்கேயும் வலி மிகுதல் கூடாது.
திரும்ப திரும்ப வந்தது
படித்து படித்துத் தெரிந்துகொண்டேன்
தேடி தேடிக் களைத்தேன்.
திரும்ப திரும்ப, படித்து படித்து, தேடி தேடி என்று வருகின்ற அடுக்குத் தொடர்களில் வலி மிகவில்லை (ஒரு வினையை உணர்ச்சியினால், அடுக்கிக் கூறும்போது ஒற்று வராது). அடுக்குத் தொடர் முடிந்ததும் வருகின்ற வினைச்சொல்லோடு, வலி மிகுந்தது. இதனை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுக்குத் தொடரில் வலி மிகாததைப் போலவே, இரட்டைக் கிளவியிலும் வலி மிகாது. பொருளில்லாத சொற்கள் அடுக்கி வருவது, இரட்டைக் கிளவியாகும். சலசல, பளபள, கலகல போன்றவை இரட்டைக் கிளவிகள்.
ஓரெழுத்து ஒருமொழியால் ஆன இரட்டைக் கிளவிகளில் வலி மிகும்.
கூக்கூ என்று கூவியது.
சீச்சீ என்று ஆனது.
-- மகுடேசுவரன்