'ஊர்' என்னும் சொல், மக்கள் கூடி வாழ்கின்ற ஓரிடத்தைக் குறிக்கிறது. அக்காலத்தில் 'ஊர்' என்னும் சொல், மருத நிலத்தில் அமைந்த ஊர்களையே குறித்தது. மருத நிலத் தலைவனுக்கு 'ஊரன்' என்று பெயர்.
ஒருவரைப் பெயர் வைத்து அழைக்கும் பெருவழக்கு தோன்றும் முன், அவர் வாழ்கின்ற ஊர்ப் பெயராலே அழைக்கப்பட்டார். திருவாதவூரார், கோவூர்க்கிழார் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. சங்கப் புலவர்களின் பெயர்களைப் பாருங்கள், அப்புலவர்கள் பலரும் அவர்கள் வாழ்ந்த ஊர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கடியலூர் உருத்திரங்கண்ணனார், இடைக்காடனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், என்று பெரும்பாலான புலவர்களின் பெயர்கள், ஊர்ப் பெயராலேயே அமைந்திருக்கின்றன.
ஊர் என்றாலே கிராமம் ஆகாது. தஞ்சாவூர், கருவூர் போன்றவை புகழ்பெற்ற ஊர்களாம். ஓர் ஊரின் வளர்ச்சியைப் பொறுத்து, அது சிற்றூர், பேரூர் என்று வகைப்படுத்தப்பட்டது. புதிதாகத் தோன்றிய ஊர் புத்தூர் என்றும்; நலன்கள் மிகுந்த ஊர் நல்லூர் என்றும் அழைக்கப்பட்டது. நாடு என்பதற்குத் தேசம் என்று பொருள் கொள்கிறோம். நாடு என்பதற்கும், ஊர் என்ற பொருள் வழங்கப்படும். எங்கோ சிற்றூர்களிலிருந்து நகரத்திற்கு வருவோரை, 'நாட்டுப்புறத்தான்' என்கிறோம். ஊர்ப்புறம் என்பதும், நாட்டுப்புறம் என்பதும் ஒன்றே.
ஓர் ஊரானது, யாருடைய உதவியுமின்றித் தனித்த வளத்தோடு நலவாழ்வு வாழும் எனில், அதுவே ஒரு நாடுமாகும். அக்காலத்தில், ஓர் ஊருக்குள்ளேயே வேண்டிய பொருட்கள் விளைவிக்கப்படும். நீரும் நிழலும் பல்வகைத் தானியங்களும் கனிகளும் கிடைக்கும். ஊர் வாழ்க்கைக்கு வேண்டிய கைவினைப் பொருட்களைச் செய்வோர் அங்கேயே குடியிருப்பர்.
தன்னிறைவான அவ்வூர், பிற ஊர்களோடு எவ்விதத் தொடர்பும் கொள்ளாத தனி நாடுபோல் சிறந்து வாழ்ந்தது. ஓர் ஊரானது பரந்து விரிந்து பலரையும் ஈர்க்கும் தன்மையுடையதாக வளர்வதுமுண்டு. அப்படி வளர்ந்து வளர்ந்து, சிற்றூர்கள் பேரூர்கள் ஆயின. நாட்டுப்புறத் தனித்தன்மை போய், பொதுத்தன்மை உருவானது.
இன்றைக்கு நாடு என்பது பலதரப்பட்ட மக்கள் வாழும் பெருநிலப்பரப்பையும், ஊர் என்பது ஒரு பகுதி மக்கள் வாழும் சிற்றூர்ப் பரப்பையும் குறிப்பிடும் சொற்களாகிவிட்டன.
-- தமிழ்மலை