PUBLISHED ON : மார் 25, 2019

'பல் போனால் சொல் போச்சு' என்பார்கள். அதனால்தானோ என்னவோ, பல்லையும், சொல்லையும் ஒருசேர காப்பாற்றி வருகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் பவித்ரா பிரியதர்ஷிணி. ஆம், இவர் மருத்துவ வேலை மட்டுமன்றி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான புத்தம் புது கதைகளையும் எழுதி அசத்தி வருகிறார். பாட்பாய்லர் (PotBoiler) என்ற போன் செயலி வழியாக, தொடர்கதைகளை இலவசமாக வெளியிட்டு வருகிறார். குழந்தைகளின் நன்னடத்தை, நட்பு, மாயாஜாலம் என்று குதூகல உலகத்தில் பயணித்து வருபவரைச் சந்தித்துப் பேசினோம்.
செல்போன் செயலியில் குழந்தைகளுக்கான கதைகள் எப்படிச் சாத்தியமானது?
பாட்பாய்லர் (Potboiler) என்ற செயலி மூலம், கதைகளை வெளியிட்டு வருகிறோம். முதலில் நான் மட்டும்தான் கதைகளை எழுதினேன். பிறகு, இந்தியா முழுவதும் ஆர்வமுள்ள பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைக் கண்டறிந்து அவர்களது கதைகளையும் வெளியிடுகிறோம்.
எந்த அளவுக்கு இளம் வாசகர்களின் பங்களிப்பு உள்ளது?
செயலி தொடங்கி 3 மாதத்திலேயே, இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் செயலியைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, இளம் வாசகர்கள் அதில் அதிகமாயிருக்கிறார்கள். அவர்கள் கதையைப் படித்துவிட்டு தரும் பின்னூட்டங்கள் நல்ல உற்சாகம் தருகிறது.
பாட்பாய்லர் செயலியில் அவர்களே சுயமாகக் கதைகளையும், ஓவியங்களையும் உருவாக்கி அனுப்பி வைக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன். சிறந்த கதைகளையும், ஓவியங்களையும் பிரசுரித்து அவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
செயலியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது எப்படி?
ஒவ்வொரு விஷயமுமே வாசகர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகள்தான். இரவு நேரக் கதைகளை சிறுவர்களுக்குச் சொல்ல, செயலியில் எல்லாவற்றையும் தொகுத்துத் தர வேண்டும் என்று வாசகர்கள் கேட்டார்கள். அதனால், செயலி உருவானது. இப்போது, அதை புத்தகமாகப் பிரின்ட் செய்தும் கொடுக்கிறோம்.
எவ்வளவு கதைகளை இளம் வாசகர்கள் அனுப்புகிறார்கள்?
இளம் வாசகர்களிடம், மிகச்சிறந்த ஆக்கத்திறன் இருப்பதை தினம்தினம் உணர்கிறேன். அவர்கள் சொல்லும் கதைகள் உண்மையில் வியப்பாக இருக்கின்றன. சிறுவர்களுக்குக் கதையார்வம் எப்போதுமே அதிகம்தான். அதை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கித் தர வேண்டும். அவர்களுக்கு வாசிப்பு அதிகமிருந்தால், கதை உருவாக்கமும் எளிதில் வசப்படும்.
நீங்கள் புதிய கதைகளை எழுதக் காரணம் என்ன?
நான் கதை எழுதுவது நிஜவாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான். பிள்ளைகள் செய்யும் வால்தனங்கள், அவர்களுக்கிடையே நட்பில் வரும் பிரச்னைகள், தைரியமாக அதனைச் சந்தித்தல் போன்றவற்றைக் கருவாக வைத்து, அறிவுரைக் கதைகளை எழுதுவேன். அதில், மந்திரம், மாயாஜாலமும் கலந்து இருக்கும்.
நாம் தற்போதைய காலத்துக்கு ஏற்ற கதைகளை நிறைய எழுதுவது தான் சிறுவர்களுக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டும். நாம் இன்று பெற்றுள்ள அறிவு அனைத்தும், நம் முன்னோர்களின் கதைகூறல் வழியாக வந்ததுதானே!.
இணையம், தொலைக்காட்சி உலகத்தில், கதைகள் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது?
வாசிப்புடன் ஒப்பிட்டால், இணையம் மற்றும் தொலைக்காட்சி உங்களை சீக்கிரம் வசீகரித்துவிடும். பல மணி நேரம் கட்டிப்போடும்தான். ஆனால், அதில் செலவழித்த நேரத்தோடு ஒப்பிட்டால், பயன்கள் மிகக் குறைவே. வாசிப்பு அப்படியில்லை. ஒவ்வொரு வரிக்கிடையேயும் சிந்திப்பதற்கான அவகாசம் உண்டு.
உங்கள் கேள்வித்திறன்தான், கற்றலுக்கான அடிப்படை. வாசிப்பில் அதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதன் உலகமே வேறுதான்.
குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிப்பதில் பெற்றோரின் பங்கு என்ன?
சிறுவர்கள் சுயமாகப் படிப்பதற்கு ஆர்வப்படுவது ஒருபுறமிருந்தாலும், பெற்றோர்களுக்கும் இதில் முக்கிய பங்குண்டு. பெற்றோர்களைப் பின்பற்றித்தான், பிள்ளைகள் நடக்கிறார்கள். பெரியவர்கள் புத்தகம் படிப்பதைப் பார்க்கும்போது, அதை அப்படியே சிறுவர்கள் பின்தொடர்வார்கள்.