
தேர்வுகள் முடிந்துவிட்டன. ரிசல்ட்டும் போட்டாச்சு. பள்ளி மூடுவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருந்தன. அடுத்த ஆண்டுக்கான வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன என்றுதான் பெயர். வகுப்புகளில் கவனம் செலுத்த முடியவில்லை.
பலருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வந்து நண்பர்களோடு பேசுவது, விளையாடுவது, அரட்டை அடிப்பது என்று நேரம் போனது. ஆனால், எங்களோடு கலந்துகொள்ளாமல் இன்னும் சிலர் இருக்கவே செய்தார்கள். குறிப்பாக, நாகராஜன், வஸந்த், பார்க்கவி, ரெஜினால்டு என்று ஒரு சிலர் இருந்தார்கள்.
இவர்களுடைய உலகமே வேறு. பேசும்போது பேசுவார்கள். மற்றபடி எப்போதும் ஏதேனும் ஒரு யோசனை. புத்தகத்தில் கவனம். பேசும்போதுகூட சகஜமாக எல்லா விஷயங்களையும் பேச மாட்டார்கள். ரொம்ப செலக்டிவ்வாகப் பேசுவார்கள்.
ஒருதரம் உமா மிஸ் தான் இவர்களையெல்லாம் 'இன்ட்ரோவர்ட்ஸ்' என்று குறிப்பிட்டார்கள். அதாவது தங்களுக்குள்ளேயே புதைந்து கொள்கிறவர்கள் என்று அர்த்தம் சொல்லிக்கொண்டேன்.
“அப்படி இல்ல கதிர். அவங்களோட பலமே அவங்கள் அமைதிதான்.” உமா மிஸ் விளக்கம் சொன்னார்.
“அது எப்படி மிஸ் பலமாகும்? யாரோடவும் பேச மாட்டேங்கறாங்க, பழகமாட்டேங்கறாங்க. எப்படி மத்தவங்களை தெரிஞ்சுப்பாங்க? கலகலன்னு பேசிப் பழகினாதானே, எல்லோரும் கூட வந்து பேசுவாங்க!”
“நீ சொல்றது ஒரு வகையான அணுகுமுறை. ஆனால், எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்க முடியும்?”
“அவங்களுக்கு வீட்டுல ஏதோ ப்ராப்ளம் மிஸ். அதனாலதான், பழகமாட்டேங்கறாங்க.”
“இதெல்லாம் தப்பான கற்பனை கதிர். அப்படியெல்லாம் இருக்க முடியாது. இந்த உலகத்துல கலகலப்பாக இருக்கறவங்களைப் போலத்தான் அமைதியா இருக்கிறவங்களும். இன்னும் சொல்லப் போனா, இவங்களுக்கு இருக்கிற பலம் ரொம்ப அதிகம்.”
“அதென்ன மிஸ் பலம்?”
“அமைதியா இருக்கிறவங்க, அடிப்படையில யோசிக்கிறவங்க. எந்தவொரு விஷயத்தையும் மனசுல வாங்கிக்கிட்டு, நிதானமாக அதை பிரிச்சு காரண காரியங்களோட யோசிக்கிறவங்க. உடனடியாக அதைப் பத்தி ஒரு அபிப்பிராயம் சொல்லணும்ங்கற அவசியம் இல்லாதவங்க.”
“அப்படின்னா, அளந்து அளந்து பேசுவாங்களா?”
“கரெக்ட். எது தேவையோ அதை மட்டும் பேசுவாங்க. பேசறதுக்கு முன்னாடி யோசிச்சுட்டுப் பேசுவாங்க. பேசும்போதே யோசிக்கிறவங்க இல்ல. படபடன்னு வார்த்தைகளைக் கொட்ட மாட்டாங்க. சொல்ற சொல், என்னவிதமான பாதிப்புகளை, தாக்கத்தை ஏற்படுத்தும்னு புரிஞ்சு பேசறவங்க. இன்னொரு நல்ல குணம் உண்டு...”
“அது என்ன மிஸ்?”
“அடுத்தவங்க பேசும்போது குறுக்கிட மாட்டாங்க. அவங்க பேசறதை பொறுமையாக காதுகொடுத்துக் கேப்பாங்க. தன்னுடைய குரல் எப்படி மத்தவங்ககிட்ட போய்ச் சேரணும்னு நினைக்கறாங்களோ, அதுபோல, அடுத்தவங்க குரலும் கேட்கப்படணும்னு விரும்புவாங்க.”
“ரெஜினால்டு அப்படித்தான் மிஸ் செய்வான். நான் பேசின பிறகுதான் பேசுவான். அவன்கிட்ட பேசறதுக்கே ரொம்ப பிடிக்கும்…”
“அதுக்கு முக்கிய காரணம், நீ என்ன சொல்றேங்கறதை அவன் கூர்ந்து கவனிக்கறான்னு அர்த்தம். நீ ஒரு விஷயத்தைப் பத்தி எவ்வளவு தூரம் தெரிஞ்சு வெச்சிருக்கே, அதுல உன்னோட தரப்பு கருத்து என்ன, நீ எடுக்கிற ஸ்டாண்டு கரெக்டான்னு யோசிக்கிறாங்க. நீ பேசும்போதே, உன்னுடைய கருத்தையும் உன்னோட அணுகுமுறையையும் அவன் எடை போடறான்னு அர்த்தம். கூடவே நீ சொல்றதுக்கு என்ன பதில் சொல்லணுங்கறதையும் தன் மனசுக்குள்ளேயே பிராசஸ் செஞ்சுக்கிட்டு இருக்கான்னு அர்த்தம்.”
“இப்படியெல்லாம் இருந்தா, எப்படி மிஸ் மத்தவங்களைக் கவர முடியும்?”
“எதுக்குக் கவரணும்? இது என்னோட கருத்து, எண்ணம். உனக்குப் பிடிச்சிருந்தா கேளுங்க. எதிராளிகளைத் திருப்திப்படுத்தணுங்கறது என்னோட நோக்கமில்ல. அவங்ககிட்ட நல்ல பெயர் வாங்கணுங்கறதும் எண்ணமில்ல.”
“ஓ! அப்படின்னா, அவங்களெல்லாம் தனிப்பிறவிகளா மிஸ்?”
“நிச்சயம் இல்ல. உங்களோட சேர்ந்து பழகறதுக்குத்தான் அவங்களும் விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனால், அவங்களோட நட்பு வெச்சுக்கிட்டா, வாழ்க்கை முழுசும் தொடரும்.”
''ஓ!”
“ஆமாம். அவங்களோட அன்பும் நட்பும் ஆழமானது. நீடிச்சு நிலைச்சு இருப்பது. தப்பு ரைட்டை எடுத்துச் சொல்லி, ஒரு அம்மா மாதிரி பார்த்துக்கற பக்குவம் அவங்களுக்கு உண்டு.”
“வெளியே பார்க்கறதுக்கு ரொம்ப கர்வமா, கோவக்காரனா தெரியறாங்களே மிஸ்?”
“நிச்சயம் இல்ல. ஆனால், கோபம் வராமல் இருக்காது. அது நியாயமான கோபமாக இருக்கும். முரட்டுத்தனம் இருக்காது. வன்மம் இருக்காது. நல்லதுக்காக கோபப்படற குணம் அது. அடுத்தவங்களோட பிரச்னைக்காக இரக்கம் கொண்ட மனம் அது.”
மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டிருந்த ரெஜினால்டைப் பார்த்தேன். அவனோடு போய் பேசிப் பழகவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. உமா மிஸ்ஸிடம் விடைபெற்றுகொண்டு, மரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.--
வெற்றிகரமான இன்ட்ரோவர்டுகள்
1. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அமைதியான வாழ்க்கையின் சலிப்பும் தனிமையும்தான் படைப்பாற்றலுள்ள மனத்தைத் தூண்டுகிறது.
2. பில் கேட்ஸ்
இன்ட்ரோவர்டுகளால் மிகச்சிறப்பாக முன்னுக்கு வரமுடியும்.
3. ஜே.கே. ரெளலிங்
எழுதுவதற்கு முன்பு தனிமையை விரும்புபவர்
4. வாரன் பப்பெட்
தனிமையில் ஏராளமான புத்தகங்களைப் படிப்பவர்
5. மகாத்மா காந்தி
மிக கனிவான முறையில் உலகை உலுக்க முடியும்.