PUBLISHED ON : மார் 25, 2019

உலக மக்களை அச்சுறுத்தும் நிகழ்வுகளில் மிக முக்கியமானது காற்று மாசுபாடு. இந்தியாவில் டில்லியில் காற்று மாசுபாடு மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கிறது. டில்லியைப் போலவே உலகத்திலுள்ள பல முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றுள் முக்கியமானது மங்கோலியா நாட்டின் தலைநகரான உலன்பாட்டர். பொதுவாகவே, மங்கோலியா நாட்டில் வெயில்காலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். குளிர்காலத்தில் குளிர் பட்டையைக் கிளப்பும். மைனஸ் நாற்பது டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் ஐம்பது டிகிரி செல்சியஸ் வரை அங்கே சர்வசாதாரணமாகக் குளிர் நிலவும்.
இந்தக் குளிர் காலநிலை, அந்த நாட்டின் காற்றை மாசு அடையச் செய்துவிடுகிறது. குளிருக்கும் காற்று மாசுபாடு அடைவதற்கும் என்ன சம்பந்தம்?
இருக்கிறது. அதாவது குளிர்காலத்தில் குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் தாங்கள் வாழ்கின்ற வீடுகளில் சுத்திகரிக்கப்படாத கரியை எரித்துக் குளிர் காய்கிறார்கள். இதனால் உண்டாகும் நச்சுப் புகை, வளிமண்டலத்தில் எக்கச்சக்கமாக சேகரம் ஆகின்றன. இந்தப் புகை, காற்றை கடுமையாக மாசு அடையச் செய்துவிடுகிறது.
மங்கோலியா முழுவதிலுமே குளிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன என்றாலும், அந்நாட்டின் தலைநகரான உலன்பாட்டர் மிகக் கடுமையாக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், மங்கோலியாவின் மொத்த மக்கள்தொகையில் 45 சதவீத மக்கள் தலைநகரான உலன்பாட்டர் நகரத்தில்தான் வசிக்கிறார்கள். இதுதவிர, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் போன்ற காரணங்களுக்காக தலைநகரை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையால் செய்வதறியாது திணறுகிறது தலைநகரம்.
குளிர்காலத்தில் குளிரைப் போக்குவதற்காக இந்த நகரத்தில் வாழ்கின்ற அத்தனை மக்களுமே வீடுகளில் கரியால் நெருப்பு மூட்டிக் குளிர் காய்கிறார்கள். இதன் காரணமாக, வளிமண்டலம் முழுவதுமே நச்சுப் புகை சூழக் காட்சி தருகிறது. இந்நாட்டின் தலைநகரில்தான் “கெர்ஸ்” என்கிற நாடோடி இனத்தவர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். திறந்தவெளிகளில் கூடாரம் அமைத்துத் தங்கும் இவர்கள், குளிரைப்போக்க கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எரித்துத் தங்களை குளிரிலிருந்து காத்துக்கொள்கிறார்கள்.
இதுபோன்ற புகை மாசுபாடு வளிமண்டலத்தைப் பாழ்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அங்கே வாழ்கின்ற மக்களை, குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
குறிப்பாக ப்ளூ, பிரான்கைட்டீஸ் போன்ற சுவாச மண்டலம் சார்ந்த பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகிறார்கள். இதற்குப் பயந்தே பெற்றோர் குளிர்காலத்தில் குழந்தைகளை வெளியில் விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள். இதனால், குழந்தைகள் வேறு விதமான ஆரோக்கியக் குறைபாடுகளையும் சந்திக்க நேரிடுகிறது.
சூரியனின் ஒளி உடலின் மேல் கொஞ்சம்கூடப் படாமல் நாள் முழுக்க குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அவர்களுக்கு வைட்டமின் -டி குறைபாடு அதிகமாகி, 'ரிக்கட்ஸ்' என்கிற நோய் வருவதாகப் பெற்றோர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.
எனவே, இந்தக் குளிர்காலக் காற்று மாசுபாடு பிரச்னையை மனத்தில்கொண்டு அந்த நாட்டு அரசு, பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறையை நீட்டித்துள்ளது. வாய்ப்பிருக்கும் பெற்றோர் தங்களது குழந்தைகளை குளிர்காலம் முடியும்வரை தலைநகரைத் தாண்டி நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்து விடுகிறார்கள்.
- சு.கவிதா