PUBLISHED ON : மார் 25, 2019

அண்மையில் அதிகரித்துவரும் வெப்பநிலை, மரங்களின் அருமையை மனிதர்களுக்கு உணர்த்தி வருகிறது. மரங்கள் நிழல் தருவதோடு மட்டுமல்லாமல், மழைப் பொழிவிற்கும் ஆதாரமாக உள்ளது. தற்போது, மரக்கன்றுகளை நடவேண்டியதன் அவசியத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
மரங்கள், வளிமண்டலத்தில் இருக்கும் காற்றைச் சுத்திகரிக்க உதவுகின்றன என்பது ஆய்வுப்பூர்வ உண்மை. வீடு மற்றும் அலுவலகங்களில் இண்டோர் பிளான்ட்ஸ் (Indoor Plants) எனும் சில வகைச் செடிகளை வளர்ப்பது வழக்கமாக இருக்கிறது. வீட்டுக்குள் வளர்க்கப்படும் தாவரங்களைப் பராமரிப்பது சுலபம். பல வித வகைகளில் இத்தாவரங்கள் கிடைப்பதால் மக்கள் இதைத் தேர்ந்தெடுத்து வளர்க்கின்றனர்.
உண்மையும் வதந்தியும்
அமெரிக்கர்கள், அதிக அளவிலான உள்ளறைத் தாவரங்களை வளர்த்து வருகின்றனர். ஆனால், உள்ளறைத் தாவரங்கள், காற்றைச் சுத்தப்படுத்துகிறது என்பது வதந்தி என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள். குறிப்பாக, அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த எல்லியாட் கால் என்கிற பல்கலைக்கழகப் பேராசிரியர், 'உள்ளறைத் தாவரங்களை வளர்ப்பதால், அந்த இடத்திலுள்ள காற்று முழுமையாகச் சுத்தப்படுத்தப்படும் என்று கூற முடியாது. காற்று சுத்திகரிக்கப்படும் வாய்ப்பு மிகக் குறைவே' என்கிறார்.
காற்று மாசுபாட்டைத் தடுக்குமா?
அமெரிக்காவின் டிரெக்ஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பேராசிரியரான மைக்கேல் வார்னிங், வீடு மற்றும் அலுவலகங்களில் வளர்க்கப்படும் உள்ளறைத் தாவரங்கள், காற்றைச் சுத்தப்படுத்தாது. அவற்றில் குறிப்பிட்ட சில வகையான உள்ளறைத் தாவரங்கள், காற்றைச் சுத்திகரிக்க உதவலாம் என்கிறார். இவரது கருத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் கோர்ஸி என்கிற மற்றுமொரு ஆராய்ச்சியாளரும் ஆமோதிக்கிறார்.
நடைமுறை உண்மை!
தற்போது, வீடு, அலுவலகங்களில் இருக்கும் காற்றைச் சுத்தப்படுத்தி வெப்பநிலையைச் சீராக வைக்க வெண்டிலேஷன் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வெண்டிலேஷன் அமைப்புகள், செய்யவேண்டிய வேலையை உள்ளறைத் தாவரங்களாலும் செய்ய முடியும். எப்படி? பத்துக்குப் பத்து பரப்பளவுள்ள இடத்தில் காற்றைச் சுத்தப்படுத்தும் திறன் கொண்ட ஆயிரம் தாவரங்களை வளர்க்க வேண்டி வரும். இது நடைமுறைக்கு ஒத்துவராது என்கிறார் பேராசிரியர் மைக்கேல் வார்னிங்.