PUBLISHED ON : டிச 24, 2018

லூயி பாஸ்டர்
27.12.1822 - 28.9.1895
பிரான்ஸ்
பாலில் உள்ள சர்க்கரையைக் காற்றில் உள்ள பாக்டீரியாக்கள், சாப்பிட்டு அழிப்பதே அது கெட்டுப்போகக் காரணம். குறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அந்த நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்த, பாலை நன்றாகச் சூடாக்கி, உடனே குளிர வைக்க வேண்டும் என்று சொன்னார். அதன் அடிப்படையில் இன்று கடைகளில் விற்கும் பால் பாக்கெட்டுகளில் 'பாஸ்டரைஸ்டு மில்க்' எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் லூயி பாஸ்டர்.
தொடக்கக் கல்வியை முடித்தார். குடும்பச் சூழ்நிலையால் மேலே சரிவரப் படிக்க முடியாமல் போனது. பள்ளிக்காலத்தில் மிகச் சாதாரண மாணவராகவே இருந்தார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கல்லூரியில் சேர்ந்து வேதியியல் அறிஞராக ஆய்வுப் படிப்பை முடித்து முனைவர் ஆனார்.
அதன்பின் ஆய்வுக்கூட உதவியாளராகச் சேர்ந்தபோது, டார்டாரிக் அமில (Tartaric acid) படிகங்களை ஆய்வுசெய்யும் வாய்ப்புக் கிடைத்தது. புகழ்பெற்ற வேதியியல் அறிஞர் என்ற பெருமையை இந்த ஆராய்ச்சி 16 வயதிலேயே பெற்றுத் தந்தது. மேலும் பண்டங்களின் நொதித்தல் (Fermentation) பற்றிய ஆய்வை மேற்கொண்டு அதற்குக் காரணமான நுண்ணுயிரிகளையும் கண்டறிந்தார்.
அந்தக் காலத்தில், வெறிநாய்க்கடி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. சூடு போடுதல், சதையை வெட்டி எடுத்தல் என, பல சிகிச்சை முறைகள் இருந்தும் குணப்படுத்த முடியவில்லை. நாய்களின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே காரணம் என்பதை பாஸ்டர் கண்டுபிடித்தார். நாயின் உமிழ்நீரையே மருந்தாக்கி, ரேபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி பதினான்கு நாட்களில் குணப்படுத்தினார்.
மனித உயிர் இருக்கும் வரை மக்கள் மத்தியில் என்றும் புகழுடன் நிலைத்திருப்பார் லூயி பாஸ்டர்.
