PUBLISHED ON : மே 16, 2016
கூடப் படிக்கும் பையன்கள் கோலிக் குண்டு விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. 'பெண்கள் ஆடுவதற்கான ஆட்டம் அல்ல இது' என்று கூறிவிட்டார்கள். ஆனால், அதைப் பற்றிக் கவலைப் படாமல் குமுதாவும் ரிதன்யாவும் தாங்களாகவே கடைக்குப் போய் இரண்டு கோலிக் குண்டுகளை வாங்கிவந்தனர். உடனே விளையாடவும் ஆரம்பித்தனர். முதல் ஆட்டத்தில் ரிதன்யா ஜெயித்து விட்டாள். இரண்டாவது ஆட்டத்தின் பாதியில் குமுதா வேகமாக அடித்ததில் ரிதன்யாவின் கோலி இரண்டாக உடைந்துவிட்டது. ரிதன்யா அழ ஆரம்பித்தாள். குமுதா பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
ரிதன்யா தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. உடைந்த கோலியின் பூப்பகுதி ஒற்றை இறக்கையாக மேலே எழுந்து பறந்தது. அதுவே ஒரு தேன்சிட்டாக மாறியது. ரிதன்யாவைப் பார்த்து ஏன் அழுகிறாய் எனக் கேட்டது.
''உடைஞ்சு போன கோலியிலிருந்துதானே நீயே வந்தே! இப்ப இப்படி ஒரு கேள்வி கேக்கறியே?'' என்றாள் ரிதன்யா. கீச் கீச் எனச் சிரித்த தேன் சிட்டு '' என் பின்னாடி வா!'' என்றது. ரிதன்யா பின்னால் நடந்து வர மெதுவாகப் பறந்தது தேன்சிட்டு. பலூன் விற்றுக் கொண்டிருந்தவரிடமிருந்து ஒரு பலூனை, கட்டிய நூலோடு அறுத்துக்கொண்டு வந்து ரிதன்யாவிடம் கொடுத்தது. ரிதன்யா, தேன்சிட்டை மறந்து பலூனைப் பிடித்துக்கொண்டு உற்சாகமாக ஓடினாள். கொஞ்ச தூரம்தான்... அதற்குள் பலூன் வெடித்துவிட்டது. ஆனால் ரிதன்யா அழாதபடிக்கு உடைந்த பலூனிலிருந்து ஒரு உள்ளங்கை அகல, வேலைப்பாடுள்ள சதுரப் பெட்டி ஒன்று கீழே விழுந்தது. அதை ரிதன்யா எடுப்பதற்குள் சடாரென அங்கு தேவதை ஒன்று தோன்றியது. கையில் மந்திரக் கோல் வைத்திருந்தது. தேவதையே அந்தப் பெட்டியைத் திறந்தது. என்ன ஆச்சரியம்! உள்ளே ஓர் அழகிய கோலிக் குண்டு. ''இது உடையவே உடையாது. இதை வைத்து நீ விளையாடலாம். உனக்கு ஒரு செய்தி சொல்றேன். நாம் தோற்றுப் போகலாம். ஆனால், உடைந்து போகக்கூடாது'' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டது.
கோலிக் குண்டை எடுத்துக்கொண்டு ரிதன்யா உற்சாகமாகப் போனபோது தேன்சிட்டு பறந்து அவளது அருகில் வந்தது. உடையாத குண்டை வைத்து கவலை இல்லாமல் விளையாடுவதற்கு வாழ்த்துச் சொன்னது. அப்புறம் ரிதன்யாவைப் பார்த்து, ''உன்னிடம் இப்பொழுது கையில் உள்ளது மந்திரக் கோலியா? உனக்கு இதைக் கொடுத்துவிட்டுப் போன தேவதைதான் மந்திரக் கோலியா?'' எனக் கேட்டுவிட்டுப் பறந்துவிட்டது. ரிதன்யாவுக்குப் பதில் தெரியவில்லை. என்றாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் விளையாடுவதற்காக குமுதாவைத் தேடிப் போனாள்.
