PUBLISHED ON : மே 16, 2016
சங்கர்: என்னடா முன்னா, உதடு சிவப்பா இருக்கு... லிப்ஸ்டிக் போடுறியா?
முன்னா: அது ஏன்டா என்னப் பாத்தா மட்டும் இப்படி எல்லாம் கேள்வி கேக்குற? வாட்டர்மெலன் ஜூஸ் குடிச்சேன் அதான் அப்படித் தெரியுது.
ச: நீ குடிச்சது தர்பூசணி ஜூஸ் இல்ல. சாயம் கலந்த ஜூஸ்.
மு: அய்யோ! நான் மட்டும் குடிக்கல. ரோட்டோரக் கடைகள்ல எல்லாரும் இதத்தான் குடிக்குறாங்க.
ச: சரிதான்! அவ்வளவு நீர்ச்சத்து இந்தப் பழத்துல இருக்குது. வெயிலைச் சமாளிக்க நமக்கு எனர்ஜியும் கிடைக்கும்.
மு: அப்புறம் ஏன்டா சாயம் அது இதுன்னு குழப்புற?
ச: இரு சொல்றேன். இயற்கையா விளையுற அந்தப் பழத்துல ஊசி மூலமா 'எரித்ரோசின் பி' அப்படிங்குற சிவப்பு நிறமியைச் சேக்குறாங்க. பாத்தவுடனே நல்லாருக்குன்னு நாமளும் வாங்கிச் சாப்பிடுறோம்.
மு: காரசாரம் வேணும்ன்னு சாப்பாட்டுல மசாலா சேர்க்குற மாதிரி அவங்களும் ருசிக்காக சேப்பாங்க. அதுல என்னடா தப்பு?
ச: ருசிக்காக இல்ல. வியாபாரத் தந்திரம். அது மட்டுமில்ல அந்தச் சிவப்பு நிறமிக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை இருக்குன்னு சொல்றாங்க.
மு: ஓ! அதனாலதான் புற்றுநோய் வந்தா எல்லாரும் சிவப்பு சிவப்பா வாந்தி எடுக்குறாங்களா? ஆனாலும், தர்பூசணியில கலர் சேர்க்கிற விஷயத்த இப்பதான் கேள்விப்படுறேன்.
ச: பொதுவா, எந்த உணவுப் பொருளுக்கு நிறமி தேவைப்படுதோ, அதுல சேர்த்துக்கலாம்ன்னு உணவுப் பாதுகாப்புச் சட்டத்துல இருக்கு.
மு: உடம்புக்கு கெட்டதுன்னு தெரிஞ்சும் உணவுகள்ல சேர்க்க அரசாங்கம் எப்படி அனுமதிக்குது?
ச: அப்படி இல்ல. அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள்னு எட்டு இருக்குது. அதை எந்தெந்த உணவுகள்ல எவ்வளவு சேர்க்கணும் என்கிற அளவும் சொல்லப்பட்டு இருக்கு. அதுக்கு மேல பயன்படுத்தினா அவ்வளவுதான்.
மு: சேர்க்கணும்னு சொல்ற, சேர்க்க வேணாம்ன்னும் சொல்ற. இப்போ என்னதான்டா பண்றது?
ச: மிட்டாய், லட்டு, ஜாங்கிரி, கேக், ஜெல் சாப்பிட்டிருக்கே இல்ல? இனிப்பு வகைகள்ல இந்த நிறமிகளை அளவோட சேர்க்கலாம். ஆனா, வெட்டப்பட்ட பழங்களில் சேர்க்கக் கூடாது.
மு: கலர் கலரா சாப்பிட்டாலும் கலர் ஆக முடியாதுன்னு சொல்ற.
