PUBLISHED ON : ஜூலை 30, 2018

'நமது கல்விமுறை பெரும்பாலும் வகுப்பறை சார்ந்ததாகவே இருக்கிறது. நம் மாணவர்களுக்குத் தேவை அனுபவப்பூர்வமான கல்வி. அதைத்தான் நாங்கள் வழங்க முயற்சிக்கிறோம்' என்கிறார் வினோத் ஸ்பேஸ் டிரக் நிறுவனத்தின் நிறுவனர்.
ஸ்பேஸ் டிரக் நிறுவனம், 'நடமாடும் கோளரங்க'த்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறது. 5 மீட்டர் சுற்றளவு கொண்ட, கோளத்துக்குள் முப்பரிமாணத்தில் விரிகிறது விண்வெளி. ஓர் அரங்கத்துக்குள் சுமார் 60 மாணவர்கள் அமர்ந்து பார்க்கலாம். 3டி கண்ணாடி ஏதும் தேவையில்லை. அண்டவெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன இந்த 3டி காட்சிகள். அனுபவப்பூர்வமாக வானியலை உணர முடிகிறது மாணவர்களால். சிறு வகுப்பு, பெரிய வகுப்பு மாணவர்களுக்கு எனத் தனித்தனியே, விண்வெளிக் காட்சிகள் திரையிடப்படுகின்றன.
வினோத், ரோபோட்டிக்ஸ் துறையில் குறிப்பிடத்தக்க பயிற்றுநரும்கூட. அவரிடம் பேசினோம்...
'நண்பர் பரத்துடன் இணைந்துதான் இந்நிறுவனத்தைத் தொடங்கினேன். மாணவர்களுக்குத் தேவை அனுபவப்பூர்வ கல்வி. அதைத் தவறவிட்டுவிட்டோம். பாடப்புத்தகங்களில், எழுத்துகளாகப் படிப்பதைவிட, கண்முன்னே விரியும் காட்சி, அனுபவப்பூர்வமாக அவர்களை அத்துடன் ஒன்றவைக்கும். மாணவர்களாகவே கற்றுக்கொள்ள, ஆசிரியர் வழிகாட்டுவதுதான் எதிர்காலக் கல்விமுறையாக இருக்கும். அதுதான் எங்கள் இலக்கு.
சுமார் 20 நடமாடும் கோளரங்கங்கள் எங்களிடம் உள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் செல்ல வசதியாக, திருச்சியில் இருந்து செயல்படுகிறோம். அதிகபட்சம் 20க்கு 20 அடி அறை இருந்தால் போதும், நடமாடும் கோளரங்கத்தை நிர்மாணிக்க. அரசுப் பள்ளிகளுக்கு கட்டணம் பெறுவதில்லை. நாசா, ஐரோப்பிய விண்வெளிக்கழகம் (DESA), அட்லெர் போன்ற உலகின் அமைப்புகளிடமிருந்து தரவுகளைப் பெறுகிறோம். விண்வெளி தொடர்பான புதுத்தகவல்களை உடனே அப்டேட் செய்து விடுவோம்,' என்றார் வினோத்.
கற்பித்தலில் புதுப்புது வடிவங்கள் வரவேற்கத்தக்கவை.
