PUBLISHED ON : மே 07, 2018

“சின்ன வயசுல யாராச்சும், என்ன ஆகப்போறேன்னு கேட்டா, எனிட் பிளிட்டன் மாதிரி நிறைய கதைகள் எழுதப் போறேன்னு சொல்வேன். கல்லூரியில் இலக்கியம் படித்தேன், சிறுவர்களுக்கு எழுதுவதுதான் எனக்கு எப்போதும் பிடிக்கும். அதுல கிடைக்கற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,” என்று பேசத் தொடங்கினார் செளமியா ராஜேந்திரன்.
இவங்களோட மயில் வில் நாட் பி கொயட் (Mayil Will Not Be Quiet) என்ற புத்தகத்துக்கு சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைச்சுருக்கு. குழந்தைகளுக்காக 22 புத்தகங்களும், 12 வயசுக்கு மேல இருக்கிற இளையோர்களுக்காக 2 புத்தகங்களும் எழுதியிருக்காங்க செளமியா.
“என்னை மாதிரி என் தோழி நிவேதிதாவுக்கும் குழந்தைகளுக்குக் கதை எழுதறது, படம் வரையறதுன்னா ரொம்ப இஷ்டம். இரண்டு பேரும் சிறுவர் இலக்கிய புத்தகங்கள் எழுதணும்னு அடிக்கடி பேசிக்கிட்டு இருப்போம். அதை இன்னிக்குச் செஞ்சிட்டோம்.
சென்னையில பிறந்து வளர்ந்திருந்தாலும் மேற்படிப்பு லண்டன்ல படிச்சேன். என்னோட எழுத்து, எண்ணங்கள் எல்லாத்துலேயும் பெரிய மாற்றங்கள் அங்கதான் நடந்தது. புதிய வழிமுறைகளோட கதைகள் எழுத எனக்கு அது பெரிதும் உதவியா இருந்தது.
உதாரணமா, நாம படிச்சா எல்லாக் கதைகளிலும் இளவரசி ஏதாச்சும் சிக்கல்ல மாட்டிப்பா. அவளைக் காப்பாத்த இளவரசன் ஓடி வருவான். இது சரியான்னு ஒரு கேள்வி வந்தது எனக்கு.
ஏன் இளவரசி தன்னைக் காப்பாத்திக்க, அவளே முயற்சி செய்யக்கூடாது? செய்ய முடியும்தானே? அப்ப அவ எப்படி, என்ன செய்வான்னு கதையை எழுத ஆரம்பிச்சேன்.
ஒருசில விஷயங்களை நாம நமக்குத் தெரியாமலேயே குழந்தைங்கிட்ட எப்படியோ திணிச்சிடுறோம். என்னோட கதையில வர்ற பெண் குழந்தைங்க கேள்வி கேட்பாங்க. ஆனா அந்தக் கேள்விகள் எல்லாமே லாஜிக்கோட இருக்கும்.
நம்ம ஊரில 12 வயசுக்கு மேல சிறுவர்களை கதைப்புத்தகங்களை படிக்க ஊக்கம் கொடுக்கிறதே இல்ல. கதையில என்ன இருக்குன்னு நினைக்கிறாங்க. கதைகள் அறிவை வளர்க்காதுன்னு நினைக்கிறாங்க. அதனால தான் அந்த வயதினருக்கு ஏற்றமாதிரியான புத்தகங்கள் அதிகமா எழுதப்படறது இல்ல, இப்ப கொஞ்சம் பரவாயில்லை.
என்னை மாதிரி நாளைக்கு எழுத்தாளர் ஆகணும்னு தோணிச்சுன்னா, என்ன பண்ணனும் சொல்றேன்…
1. முதல்ல வெளி உலகில நடக்கிற விஷயங்களை உற்று கவனிக்கணும். கதைகள் நம்ம மண்டைக்குள்ள இருந்து வராது. நாம பார்க்குற விஷயங்களிலிருந்து தான் நம் கற்பனை வெளிப்படும்.
2. வெளி உலகம் தெரிஞ்சா போதும்ன்னு இருக்கக்கூடாது. நிறையபேர் எழுதணும்னு ஆசைப்படறாங்க. ஆனா வாசிக்கற பழக்கம் சுத்தமா இல்ல. வாசிக்கற பழக்கத்தை வளர்த்துக்கொண்டா, நிறைய விஷயங்களை கத்துக்க முடியும்.
3. இது எல்லாத்தையும் விட முக்கியமானது. உங்களோட எழுத்து ஆற்றலைப் பத்தி யாராவது விமர்சனம் செஞ்சா, அதை நல்ல விதமா எடுத்துக்கிட்டு மாத்திக்க பார்க்கணும். அதைத் தனிப்பட்ட விமர்சனமா எடுத்துக்கிட்டா, எழுத்தாளராக வளரவே முடியாது.
4. நிறைய எழுதுங்க. இன்னிக்கு எழுதறதுக்கான வழிமுறைகள் நிறைய வந்திருக்கு. தொடர்ந்து எழுதும்போது உங்க எழுத்தோட வீச்சு நல்லா மாறும்.
5. ஒரே இரவில் எழுதி பெரிய எழுத்தாளர் ஆக முடியாது. கடின உழைப்பு தேவை. தொடர்ச்சியா இயங்கினா, நாளைக்கு நீங்களும் பெரிய எழுத்தாளர் ஆக முடியும்.”
செளமியாவின் சில முக்கிய புத்தகங்கள்:
1. Water stories from around the world
2. Mayil will not be quiet
3. Monday to Sunday
4. The pleasant Rakshasa
