
ஜனவரி 9, 1922: ஹர் கோவிந்த் குரானா பிறந்த நாள்
முதன்முறையாக, செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து, அறிவியல் உலகிற்கு புது வழி காட்டினார். இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான இவர், 1968ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
ஜனவரி 9, 2003: வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாள்
அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் சார்பில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் நினைவாக, இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஜனவரி 11, 1859: கர்சன் பிரபு பிறந்த நாள்
இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர். பேரரசு கொள்கையுடன் ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார். இந்தியக் கல்விமுறையில் பல சீர்த்திருத்தங்கள் செய்தார். காவல்துறைக்கும் ராணுவத்திற்கும் பயிற்சிப் பள்ளிகள் ஏற்படுத்தினார்.
ஜனவரி 12, 1863: சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்
இந்திய கலாசாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் காட்டினார். இவரது கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தன. 1893ல், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவு, உலகப்புகழ் பெற்றது. இந்த நாள் இந்தியா தேசிய இளைஞர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 14, 1977: நாராயண் கார்த்திகேயன் பிறந்த நாள்
உலக கார் பந்தயங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்துகொண்ட முதல் இந்தியர். 1996ல் ஃபார்முலா ஆசியா பந்தயங்களில், முதல் வீரராக வந்து, 'முதல் ஆசியர்' என்ற பெருமையைப் பெற்றார். 2010ம் ஆண்டில் இவருக்கு, 'பத்மஸ்ரீ ' விருது வழங்கப்பட்டது.
ஜனவரி 15: பொங்கல் திருநாள்
தை மாதப் பிறப்பு அறுவடைத் திருநாளாக - தை பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக, இந்த நாள் அமைகிறது.

