ஆகஸ்ட் 21, 1907 - ப.ஜீவானந்தம் பிறந்த நாள்
நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பொதுவுடைமைத் தலைவர். 'ஜீவா' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடினார். கம்யூனிச இயக்கத்தில் பிரபலமானவராகவும் 'ஜனசக்தி' இதழ் ஆசிரியராகவும் இருந்தார்.
ஆகஸ்ட் 22, 2004 - சென்னை நாள்
1639, ஆகஸ்ட் 22ம் தேதி மதராசபட்டினம் உதயமானது. அதை மையமாக வைத்து, சென்னை நகரின் பாரம்பரியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் வகையில், இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 23, 1998 - சர்வதேச அடிமை வாணிப ஒழிப்பின் நினைவூட்டல் நாள்
ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக, 1791 ஆகஸ்ட் 22 நள்ளிரவு முதல் 23 வரை போராடினர். அதை நினைவுகூர ஹெய்ட்டி தீவில் நினைவு விழா கொண்டாடப்பட்டு ஒவ்வோராண்டும் தொடர்கிறது.
ஆகஸ்ட் 26, 1883 - திரு.வி.க. பிறந்த நாள்
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என, பல துறைகளிலும் ஈடுபட்ட தமிழறிஞர். இவரது தமிழ்நடையின் காரணமாக, 'தமிழ்த்தென்றல்' என்றும் அழைக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 26, 1910 - அன்னை தெரசா பிறந்த நாள்
கருணையின் உருவமாக, சேவையின் உறைவிடமாக இன்றும் புகழப்படுகிறார். கொல்கத்தாவில், 'பிறர் அன்பின் பணியாளர் சபை'யை நிறுவி, ஏழைகளுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும் தொண்டாற்றினார். 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

